செய்திகள்
ரெட்டியார்பட்டியில் காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பணிகளை கே.எஸ்.அழகிரி பார்வையிட்ட போது எடுத்த படம்.

வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-10-21 07:11 GMT   |   Update On 2019-10-21 07:11 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
நெல்லை:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை நம்பியுள்ளனர்.

நாங்கள் ஜனநாயகத்தையும், கொள்கைகளையும் நம்பியுள்ளோம். இதனால் பொதுமக்கள் இந்த தேர்தல் முடிவுகளை ரசித்து எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு பொது மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள். இந்த இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் வேட்பாளர் ராணுவ வீரராக இருந்து வந்தவர். எனவே குமரி முதல் இமயம் வரை அவருக்கு சொந்த மண்தான்.


நாங்குநேரி தொகுதிக்காக அவர் சிறப்பாக செயல்படுவார். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி காமராஜரின் திட்டங்களை செயல்படுத்தாமல் நழுவி விட்டது. தமிழகத்தில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் அது பலவீனமாக உள்ளது.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க.வினர் ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளனர். ஆனால் எங்கள் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு போட்டுள்ளார்கள். நாங்குநேரி தொகுதியில் உள்ள சில இடங்களில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் சிலர் தடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினரால் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது. 2 தொகுதிகளிலும் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News