செய்திகள்
சஸ்பெண்டு

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு- திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்டு

Published On 2020-09-15 08:07 GMT   |   Update On 2020-09-15 08:07 GMT
திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் மனைவியுடனான கள்ளத்தொடர்பு வழக்கில் போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 33), ஆட்டோ டிரைவர். இவர் கரூரில் கார் டிரைவராக இருந்த போது காந்தி கிராமத்தை சேர்ந்த மதுமிதா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாறவே இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பாலமலை பவித்திரம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் செட்டியப்பட்டியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

கடந்த ஜூலை 2019-ல் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய மதுமிதா, திருப்பூரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் போனிலேயே முனியப்பனுடன் பேசி வந்துள்ளார். காதலித்து திருமணம் செய்ததால் முனியப்பன் மீது தன் குடும்பத்தினர் கோபமாக இருப்பதாக கூறி திருப்பூருக்கு முனியப்பனை வரவேண்டாம் என மதுமிதா தடுத்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், குழந்தையை பார்க்க வரவேண்டாம் என்றும், தானே ஊருக்கு வருவதாகவும் மதுமிதா முனியப்பனுக்கு போனில் தெரிவித்துள்ளார்.

அதே ஆண்டு செப்டம்பரில் தனியாக ஊருக்கு வந்த மதுமிதா குழந்தை கால் ஊனமாக பிறந்ததால் மாமா வீட்டில் சிகிச்சைக்காக விட்டு விட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முனியப்பன் கரூரில் உள்ள பைனான்சியரிடம் தனது காரின் ஆவணங்களை ஒப்படைத்து ரூ.3 லட்சத்து 10ஆயிரத்தை கடனாக பெற்று தந்துள்ளார்.

மேலும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மேலும் பணம் தேவைப்படுவதாக மதுமிதா கூற, மீண்டும் ரூ.25 ஆயிரம், ரூ.90 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஏப்ரல் 2020-ல் ஊருக்கு வந்த மதுமிதா குழந்தையை உடன் அழைத்து வரவில்லை. இதுகுறித்து முனியப்பன் கேட்டபோது, குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என கூறி விட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் இரவு நேரங்களில் மதுமிதா செல்போனில் அடிக்கடி பேசுவது முனியப்பனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது

இதையடுத்து மதுமிதாவின் செல்போனை வாங்கி பார்த்த போது, அவருடன் வேறு ஒரு ஆண் படுக்கையில் இருக்கும் பல படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் விசாரித்த போது, அந்த நபர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும் தீபன்குமார் என முனியப்பனுக்கு தெரியவந்தது. இது பற்றி மதுமிதாவிடம் முனியப்பன் கேட்க இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13-ந்தேதி திருச்சி எஸ்.பி., மணப்பாறை டி.எஸ்.பி., பிருந்தா ஆகியோரிடம் தனது மனைவி பணம், 8 பவுன் நகை, மற்றும் காரை எடுத்து சென்று விட்டதாகவும், திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும் வையம்பட்டி போலீஸ் நிலைய காவலர் தீபன்குமார் என்பவருடன் தனிக்குடித்தனம் நடத்துவதாக கூறியதுடன், தனது மனைவி செல்போனில் இருந்த படுக்கையறை புகைப்படங்களையும் காண்பித்துள்ளார்.

இதையடுத்து மதுமிதா மீது வையம்பட்டி போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்திய டி.எஸ்.பி. பிருந்தா, போலீஸ்காரர் தீபன்குமாரை சஸ்பெண்டு செய்ய திருச்சி மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து தீபன்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News