லைஃப்ஸ்டைல்
நீங்களும் அழகு ராணி போல் ஜொலிக்க

பெண்களே ஆரோக்கியமாக, அழகாக ஜொலிக்க வேண்டுமா? அப்ப இதை பின்பற்றலாம்

Published On 2021-03-15 06:24 GMT   |   Update On 2021-03-15 06:24 GMT
ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெண்களே நீங்கள் என்றும் 16 ஆக ஜொலிக்க விரும்பினால் ஆரோக்கியத்தில் இந்த 5 விஷயங்களை மறக்கக்கூடாது.
நீங்களும் அழகு ராணி போல் ஜொலிக்க ஐந்து வழிகள்:

1. சரியான உணவு

ஆரோக்கியமான சரிவிகிதச் சத்துணவு உங்கள் மேனியழகில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எண்ணெய்ப் பதார்த்தங்கள் மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொந்தரவுகளை உண்டாக்கக்கூடும். அதற்காக நீங்கள் முற்றிலுமாக பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை. எப்போதாவது குறைந்த அளவில் மட்டும் ருசிக்கலாம். அவற்றை விரும்பி, அதிக அளவில் பசிக்காகச் சாப்பிடுவது நல்லதல்ல!

பசுமையான பச்சைக் காய்கறிகளையும், கீரை வகைகளையும், பழவகைகளையும் உங்கள் அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் மேனி பளபளக்கும்! கீரை வகைகளில் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை போன்றவையும், பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவையும், சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லப்படும் ஆரஞ்சு, நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சைக் கனிகளும், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற சத்தான பழங்களும் உங்கள் மேனியை வசீகரிக்கும் வனப்புடன் திகழச்செய்யும்!

2. உடற்பயிற்சி

உடற்பயிற்சிக் கூடங்களில் தினமும் அதிகாலையில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்கள் உடலின்ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்களை உடல் பாரமின்றி எடை குறைந்து எழில்மிகு மேனியுடன் வலம்வரச் செய்யும்..! உடற்பயிற்சியின்போது வெளிவரும் வியர்வையில் உடலில் உள்ள நச்சுப்பொருட்களும் வெளி வருகின்றன. ஆதலால் உடற்பயிற்சியின் இன்றியமையாமையை எளிதில் புரிந்து கொள்ளலாம்!

3, தளதள உடம்புக்கு தண்ணீர்

நல்ல உடலுக்கு நாள் ஒன்றிற்கு 8 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நீராகாரப் பழக்கம் உடலின் ஜீரணப் பாதையைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைத் தவிர்த்து மேனியையும் சருமத்தையும் சுத்தமாக்கி சுறுசுறுப்படையச் செய்யும்! சருமம் மென்மையாகி ஜொலிக்கவும் செய்யும்.

உங்கள் மேனி உலர்ந்துவிடாமல் இருக்க தினமும் குளிப்பதும், அடிக்கடி முகத்தை நீரால் அலம்புவதும் அவசியம்! சூரியக் குளியல் எனப்படும் காலை மாலை இளவெயில் மேனியில் படுதலும் அழகிய மேனிக்கு அவசியத் தேவையாகும்.

4, நிறைவான மனம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! அதிகப்படியான அழகு சாதனங்களை பயன்படுத்தி உங்கள் மேனியழகைப் பாழாக்குவதும் அதுபோன்றதே. முக அழகு கிரீம் பூசாமல் என் முகத்தை வெளியே காட்டவே முடியாது என்று நினைக்க வேண்டாம். படுக்கைக்குப் போகும்முன்பு நீரால் முகத்தை கழுவி மென்மையாக துடைத்துவிட்டு தூங்கச்செல்லுங்கள்.

5. தூக்கம் சொர்க்கம்

ஆண்களையும், பெண்களையும் என்றென்றும் இளமை அழகுடன் மிளிரச்செய்வது ஆழ்ந்த நிம்மதியான தூக்கம்தான். ஆழ்ந்த தூக்கமானது உங்கள் முகத்தில் தோன்றும் கருவளையங்களை நீக்கிட பேருதவி புரிகின்றது! தினமும் 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. முகத்திற்கு பளபளப்பை தருகிறது. அதனால் தான் அழகு ராணிகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.
Tags:    

Similar News