செய்திகள்
கொள்ளை

ரேணிகுண்டா மண்டலத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

Published On 2020-11-21 07:34 GMT   |   Update On 2020-11-21 07:34 GMT
ரேணிகுண்டா அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிக்கொண்டு, மற்றொரு பூட்டை போட்டு கோவிலை பூட்டிச்சென்றனர்.
ஸ்ரீ காளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் கரகம்பாடி அருகில் கட்டப்பட்டாலம்மன் கோவிலுக்கு சமீப காலமாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், கோவிலுக்கு வருமானமும் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தொட்லமிட்டாவை சேர்ந்த ராமச்சந்திரய்யா என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். கோவிலில் தினசரி பூஜைகள் நடத்துவதோடு ஒவ்வொரு ஆண்டும் அம்மனுக்கு திருவிழாவும் நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்தினர் அனைவரும் ஒருமனதாக தொட்லமிட்டா கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவரை கோவில் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 பேர் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி உள்ளனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த புதிய பூட்டை போட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி பாலமுரளி வழக்கமாக பூட்டப்படும் பூட்டு உடைக்கப்பட்டு, வேறு பூட்டுமூலம் கோவில் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி ரேணிகுண்டா நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஞ்சுயாதவ், சப்-இன்ஸ்பெக்டர் சுனில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த பதிவுகளை பரிசீலனை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொட்ல மிட்டாவை சேர்ந்த சலம், ராஜேந்திரா, பாபு, நாகராஜ் ரெட்டி, ஸ்ரீனிவாசுலு, முனியய்யா ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News