செய்திகள்
விராட் கோலி

விராட் கோலி பொறுப்பான ஆட்டம்- பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2021-10-24 15:55 GMT   |   Update On 2021-10-24 18:03 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 57 ரன்கள் குவித்த நிலையில், ஷாகீன் அப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார்.
துபாய்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்கத்தில் சற்று தடுமாறியது.

துவக்க வீரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கே.எல்.ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஷாகீன் அப்ரிடி கைப்பற்றினார். சூரியகுமார் யாதவ் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ரிஷப் பண்ட் 39 ரன்கள் சேர்த்த நிலையில், ஷதாப் கான் ஓவரில் அவுட் ஆனார்.



நங்கூரம் போல் நின்று ஆடிய விராட் கோலி 57 ரன்கள் சேர்த்த நிலையில், ஷாகீன் அப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 13 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 11 ரன்கள், புவனேஸ்வர் குமார் 5 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹசன் அலி 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
Tags:    

Similar News