செய்திகள்
போலீஸ் வேனில் இருந்து தாவிக் குதிக்கும் நவ்தீப்

விவசாயிகள் போராட்ட ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு -காரணம் இதுதான்

Published On 2020-11-28 06:27 GMT   |   Update On 2020-11-28 06:27 GMT
போராட்டத்தின்போது சக விவசாயிகளை காப்பாற்றுவதற்காக இளம் விவசாயி நவ்தீப் தனது உயிரை பணயம் வைத்து செய்த செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணியை தடுக்க டெல்லி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். 

அதன்பின்னர் நிலைமை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தின்போது சக விவசாயிகளை காப்பாற்றுவதற்காக இளம் விவசாயி ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து செய்த செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த அந்த விவசாயி பெயர் நவ்தீப் சிங்(வயது 26). இவர் விவசாய சங்க தலைவர் ஜெய் சிங்கின் மகன் ஆவார்.

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதில் பல விவசாயிகள் சிக்கிக் திணறினர். அவர்களை காப்பாற்றுவதற்காக திடீரென பாய்ந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனத்தின் (தண்ணீர் பீரங்கி) மீது ஏறிய நவ்தீப் சிங், தண்ணீரை வெளியேற்றும் வால்வை அடைத்தார். அவரைப் பிடிக்க போலீஸ்காரர் ஒருவர் முயன்றபோது, அவர் அருகில் வந்த டிராக்டர் டிரெய்லரில் குதித்தார். இதையடுத்து விவசாயிகள் வாகனங்களில் முன்னேறினர். 

அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயிகள் போராட்டத்தின் ஹீரோ என அவரை பலரும் பாராட்டி உள்ளனர். 

ஆனால், காவல்துறையின் நடவடிக்கையை தடுத்ததால் நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News