செய்திகள்
பக்தியால் விளைந்த உரிமை

ஆன்மிக அமுதம் - பக்தியால் விளைந்த உரிமை

Published On 2021-10-28 12:15 GMT   |   Update On 2021-10-28 12:15 GMT
சிலேடைக் கவிஞர் காளமேகப் புலவர் கடவுளைக் குறித்து உரிமையோடு கிண்டல் செய்வது குறித்து திருப்பூர் கிருஷ்ணன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நமது பக்திக் கவிஞர்கள் கடவுளிடம் அளவற்ற உரிமை எடுத்துக் கொள்பவர்கள். கடவுளைக் கிண்டல் செய்யவும் கேலி செய்யவும் கூட அவர்கள் தயங்குவதில்லை. சிலேடைக் கவிஞர் காளமேகப் புலவர், கடவுளைக் குறித்து உரிமையோடு கிண்டல் செய்வது, சமத்காரமாகக் கேள்விகளை எழுப்புவது ஆகியவற்றிலும் வல்லவர்.

பொதுவாக சிவபெருமானுக்கு எத்தனை கண் எனக் கேட்டால் எல்லோரும் உடனே மூன்று கண் என்றுதான் பதில் சொல்வார்கள். ஆனால் காளமேகப் புலவர் அவருக்கு உண்மையில் உள்ளதென்னவோ அரைக்கண் தான் என்று விவாதபூர்வமாக நிறுவுகிறார்!
சிவனில் பாதி பார்வதி. எனவே ஒன்றரைக்கண் பார்வதியுடையது. மீதி இருக்கும் ஒன்றரைக் கண்ணில் ஒரு கண் கண்ணப்பர் அப்பியது. அப்படியானால் சிவனுக்கு என்று இருக்கும் கண் அரைக்கண் தானே என்பதுதான் அவர் வாதம்.

`முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க
உமையாள் கண் ஒன்றரை மற்று ஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால் என்று அறி!
`
தம் வினை தீரவேண்டும் என்று வேளூருக்குச் சென்று சிவபெருமானை வழிபட்ட காளமேகப் புலவருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. தனக்கு வந்த வினையையே தீர்க்க வகையறியாதவர் சிவன். அப்படியிருக்க, எப்படிப் பிறருடைய வினைகளைத் தீர்த்து வைப்பார் என்பதுதான் அந்த சந்தேகம்.

ஒருகாலைத் தூக்கி நிற்கிறார் நடராஜர். வாதம் போலிருக்கிறது. அவரது மைத்துனரான திருமாலின் பாதத்தில் கங்கை உற்பத்தியாகிறது என்கிறார்கள். ஒருவேளை திருமாலுக்கு நீரிழிவோ என்னவோ? பிள்ளை விநாயகருக்கோ பெரும் வயிறு. இவற்றையெல்லாம் சரிசெய்ய இயலாத சிவன் என் வினைகளை எபபடித் தீர்ப்பார் என்று வினவுகிறார் காளமேகம்.

`வாதக் காலாந் தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் புத்திரர்க்கு - ஓதக் கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்த வினை தீர்ப்பார் இவர்?`

சிவனுடைய பிள்ளை முருகனின் பெருமைகளை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். முருகனின் தந்தையான சிவனோ கையில் திருவோடு வைத்துக் கொண்டு பிச்சையெடுப்பவன். தாய் பார்வதியோ மலையில் வாழும் நீலி. முருகனின் மாமனான கண்ணனோ உறியிலிருக்கும் வெண்ணெயைத் திருடும் திருட்டுப் பயல். முருகனின் அண்ணன் விநாயகனுக்கு ஒன்றல்ல, இரண்டு சிறப்புக்கள் உண்டு. சப்பைக்கால், தவிர பெரிய வயிறு வேறு. இவையெல்லாம் தான் ஆறுமுகனின் பெருமைகள் போலும் என நகைக்கிறார் காளமேகம்

`அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்கு
எண்ணும் பெருமை இவை.`

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய தனிப்பாடல் ஒன்று  கைலாயத்தில் சிவகுடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நகைச்சுவையாய்ச் சித்திரிக்கிறது. சிவனிடம் வந்தான் விநாயகன். தன் பெரிய செவியை முருகன் நறுக்கென்று கிள்ளியதாக அழுதுகொண்டே முறையிட்டான். சிவன் முருகனை அழைத்து  விசாரணை செய்தார்.  

முருகன் `அண்ணன்தான் என் ஆறுமுகத்தில் உள்ள பன்னிரண்டு கண்களை ஒன்று இரண்டு மூன்று என எண்ணினான்` என்றான். உடன் சிவபெருமான் விநாயகனைப் பார்த்து `நீ அப்படி ஏன் செய்தாய்?` எனக் கேட்டார். `அதுசரி, என் தும்பிக்கையை தம்பி முருகன் எத்தனை முழம் உள்ளது என அளந்து பார்த்தது மட்டும் என்ன நியாயம்?` எனக் கேட்டான் விநாயகன்! முருகன் நகைத்து நின்றான்.
சிவபெருமான் பார்வதியிடம் `உன் பிள்ளைகள் செய்வதைப் பார்!` என்று சொல்லிச் சிரிக்க, விநாயகனைத் தன் அருகே அழைத்து சமாதானப்படுத்தினாளாம் அன்னை பார்வதி.  

‘அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான்
  ‘ஐய, என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
 அத்தன் வேலவனை நோக்கி

விரைவுடன் வினவிடவே, ‘அண்ணன் என் சென்னியில்
  விளங்குகண் எண்ணினான்’ என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து, நீ அப்படி   
  விகடம் ஏன் செய்தாய்? என

மருவும் என் கைந்நீளம் முழம் அளந்தான்’ என்ன,
 மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி, ‘நின்
 மைந்தரைப் பாராய்” என

கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
  கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமை காக்கவே!”

தமிழில் மட்டுமல்ல, சம்ஸ்க்ருதத்திலும் இதுபோன்ற அழகிய கற்பனைகள் உண்டு.

`ஓர் ஊரில் மூக்கின்மேல் விரல்வைத்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்துள்ள வித்தியாசமான ஐயப்பன் சிலை இருந்தது. மகான் அப்பய்ய தீட்சிதர் அந்த ஊருக்குப் போனார். அந்தச் சிலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அதுபற்றி விசாரித்தார். சிலையைச் செய்த சிற்பிக்கு ஐயப்பன் அந்தக் கோலத்தில் கனவில் காட்சி தந்தாராம். அதனால்தான் அப்படிச் செய்தாராம்.

ஐயப்பன் எதைப்பற்றி யோசனையில் ஆழ்ந்துள்ளார் என்று யாராவது சரியாகத் தெரிவித்தால், அதாவது அந்தக் காரணத்தைச் சிலை ஒப்புக் கொண்டால் உடனே சிலை மூக்கில் உள்ள விரலை எடுத்துச் சரியாக வைத்துக் கொள்ளும் என்றும் சொல்லப்பட்டதாம். நிறையப் பேர் வந்து ஏதேதோ காரணமெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். சிலை மூக்கிலிருந்து விரலை எடுத்தால் தானே? தீட்சிதருக்கு ஒரு காரணம் புலப்பட்டது. உடனே அந்தக் காரணத்தை மையமாக வைத்து ஒரு சுலோகம் சொன்னார். என்ன ஆச்சரியம். மறுகணம் அந்தச் சிலை மூக்கிலிருந்து கையை எடுத்து விட்டது. சரி. தீட்சிதர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? பரமசிவனுக்கும் மோகினியாக மாறிய விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை ஐயப்பன். பரமசிவன் ஐயப்பனின் தந்தை. எனவே தந்தையின் மனைவியான பார்வதியை ஐயப்பன் அம்மா என்று கூப்பிடலாம்.

மோகினியாக மாறிய விஷ்ணு ஐயப்பனின் தாயார். எனவே அவரையும் அம்மா என்று கூப்பிடலாம். ஆனால் விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை எப்படி அழைப்பது? ஐயப்பனுடைய தாயின் பத்தினி அவள்! தாயின் மனைவியை என்ன சொல்லி அழைப்பது என்றுதான் ஐயப்பன் யோசனையில் ஆழ்ந்துள்ளார் என்று தீட்சிதர் ஒரு காரணத்தைச் சொன்னார். அது சரியான காரணம்தான் என்று ஒப்புக் கொள்கிற வகையில் உடனே அந்த ஐயப்பன் சிலை, தன் மூக்கில் உள்ள விரலை எடுத்துவிட்டு, எல்லா ஊர்களிலும் உள்ள ஐயப்பனைப் போல, உட்கார்ந்த கோலத்தில் கையை முழங்காலில் வைத்துக் கொண்டதாம்! 

*நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவம் என்ற கவிதை நூலில் தீட்சிதர் சிவனை நோக்கி ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.



 `சிவனே, மதுரையில் நீ வந்திக் கிழவிக்குக் கூலியாளாக அவள் கொடுத்த பிட்டுக்கு மண்சுமந்தாய். சரியாக வேலை செய்யவில்லை என்று அரிமர்த்தன பாண்டியன் மூலம் பிரம்படி பட்டாய். உன்னைப் பிரம்பால் அடித்தபோது எல்லா மனிதர்களின் முதுகிலும் சுளீர் என அந்த அடி விழுந்தது. ஏனென்றால் எல்லாமாக இருப்பவன் நீ தானே? அதுசரி. நீ வந்திக் கிழவி கொடுத்த பிட்டைச் சாப்பிட்டாயே? அப்போது எல்லோர் நாவும் தித்தித்திருக்க வேண்டுமே? அப்படி ஏன்  தித்திக்கவிலை?` இதுதான் கேள்வி. இதற்கு சிவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா?`நான் சோம்பேறித்தனமாக மண் சுமக்காமல் இருந்தேன் என்பதற்காகத் தானே என் முதுகில் பிரம்படி விழுந்தது? அப்போது என்போல் சோம்பேறிகளாக இருப்பவர்கள் முதுகில் எல்லாம் இந்த அடி விழட்டும் என்று  நினைத்துக் கொண்டேன். எல்லோருமே சோம்பேறிகள் என்பதால் எல்லார் முதுகிலும் அடி விழுந்தது.

வந்திக் கிழவி பிட்டைக் கொடுத்தபோது இவளைப்போல் ஆத்மார்த்தமாக என்மேல் பக்தி செலுத்துபவர் நாவெல்லாம் தித்திக்கட்டும் என்று நினைத்துக் கொண்டுதான் பிட்டைச் சாப்பிட்டேன். ஆனால் அவளைப் போல் அத்தனை ஆத்மார்த்தமாக யாரும் பக்தி செய்யவில்லை என்பதால் யார் நாவும் தித்திக்கவில்லை!`



*முற்காலக் கவிஞர்கள் மட்டுமல்ல, தற்காலக் கவிஞர்களும் உரிமையோடு கடவுளிடம் கேள்வி எழுப்புகிறார்கள். சுஜாதா விஜயராகவன் எழுதிய இரண்டு கீர்த்தனைகள் அப்படி சிவனிடம் கேள்வி கேட்கின்றன. ஒரு கீர்த்தனை `நீலகண்டரே வாரும்` எனத் தொடங்குகிறது. `நீலகண்டரே! விஷத்தை அருந்திய போது பார்வதி உமது கழுத்தைப் பிடித்தாள். அதனால் விஷம் கழுத்தோடு நின்று கழுத்து மட்டும் நீல நிறமாயிற்று. நீர் நீலகண்டன் என அழைக்கப் பட்டீர்.

எங்கள் தேசத்திற்கு வந்து இங்குள்ள மாசுபட்ட காற்றை சுவாசித்துப் பாரும். அதில் உள்ள விஷத்தால் உம் உடல் முழுவதுமே நீல நிறமாகிவிடும்!` என்கிறது அந்தக் கீர்த்தனை.அவரின் இன்னொரு கீர்த்தனை சிவபெருமானை முன்னிலைப் படுத்தி மதுவிலக்கிற்கு ஆதரவாக எழுதப்பட்டது. `அடிவாங்கிப் பாரும் ஐயா...` எனத் தொடங்குகிறது அது.

`சிவபெருமானே! நீர் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதெல்லாம் மிகச் சாதாரணம். நீர் தமிழ்நாட்டில் பெண்ணாய்ப் பிறந்து மதுக்கடைக்குச் செல்லும் ஒருவனுக்கு மனைவியாக வேண்டும். நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து அவன் அடிக்கும் அடியை நீர் பட வேண்டும். அப்போது தெரியும் அடியின் வலி` என்கிறது அந்தப் பாடல்.

மகாகவி பாரதியார் கண்ணக் கடவுளைத் தம் வேலையாளாக ஆக்கி `கண்ணன் என் சேவகன்` என்ற தலைப்பிலேயே பாட்டெழுதவில்லையா? எல்லாம் பக்தியால் விளைந்த உரிமைதான்!
அப்படியெல்லாம் இலக்கியச் சுவை சொட்டச் சொட்டக் கடவுளையே பகடி செய்து எழுதப்பட்ட பக்திப் பாடல்களை நம்மோடு சேர்ந்து கடவுளும் வாசித்து ரசிப்பார் என்பதில் சந்தேகமில்லை!   
Tags:    

Similar News