செய்திகள்
அபிலாஷ் பெர்லின்

கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை- போலி அதிகாரி கைது

Published On 2020-10-14 06:52 GMT   |   Update On 2020-10-14 06:52 GMT
கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
குளச்சல்:

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின் (வயது 39). மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டிற்கு சென்று ‘தான் சுகாதார துறை ஆய்வாளர் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்‘ என அறிமுகம் செய்து விட்டு, வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இதனையறிந்த அபிலாஷ் பெர்லின் தலைமறைவனார். இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையிலான தனிப்படையினர் நேற்று கொல்லங்கோட்டில் வைத்து அபிலாஷ் பெர்லினை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலி சுகாதார ஆய்வாளர் அபிலாஷ் பெர்லினுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். அதன்பின்பு அபிலாஷ் பெர்லின் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News