செய்திகள்
கோப்பு படம்

எழும்பூரில் திருடிய செல்போனுக்கு சண்டை போட்ட 3 கொள்ளையர்கள்

Published On 2019-11-28 11:11 GMT   |   Update On 2019-11-28 11:11 GMT
எழும்பூரில் அசாம் மாநில வாலிபரிடம் திருடிய செல்போனுக்காக சண்டை போட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

எழும்பூர் கண் மருத்தவமனை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் நேற்று இரவு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக எழும்பூர் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பட்டாளத்தை சேர்ந்த இம்தியாஸ், அசேன், மூலக்கடை சர்மாநகரை சேர்ந்த இர்பான் என்பது தெரிய வந்தது. திருட்டு செல்போன் ஒன்றையும் வைத்திருந்தனர்.

3 பேரும் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் வழியே மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவரை தாக்கி செல்போனை பறித்துள்ளனர்.

இந்த செல்போனுக்காகவே 3 பேரும் சண்டை போட்டுள்ளனர். அப்போதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர். செல்போன் பறிப்பு தொடர்பாக சுனில் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

தனது செல்போனுக்கு பின்னால் சுனில் ஆதார் அட்டையை வைத்திருந்தார். இதனை வைத்தே 3 பேரும் திருடி வந்தது அவரது செல்போன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இம்தியாஸ், அசேன், இர்பான் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News