செய்திகள்
கர்ப்பிணி பெண்

கொரோனா பாதித்த 40 கர்ப்பிணி பெண்களுக்கு எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2021-04-30 04:41 GMT   |   Update On 2021-04-30 04:41 GMT
தாய்மார்கள் இ-சஞ்சீவி திட்டத்தின் மூலமும், உதவி மையம் மூலமும் மருத்துவர்களின் ஆலோசனைகளை போன் வழியாக பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை:

கொரோனா தொற்று கர்ப்பிணி பெண்களை அதிகமாக பாதிக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது பரவி வரும் 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் 10 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதில் நிறைமாத கர்ப்பிணிகளும் அடங்குவார்கள்.

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள் உள்ளன. அவற்றில் இன்று வரை கொரோனா பாதித்த 40 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெறுகிறார்கள்.



இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விடும். அதனால் படுக்கைகளை அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-

கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தினமும் 10 பேர் வருகிறார்கள். 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகிறார்கள். பாதிப்பு இந்த மாதம் அதிகரித்துள்ளதால் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டு, பிரசவத்திற்காக காத்திருக்கும் பெண்கள் வார்டுகள் உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்ற கர்ப்பிணிகளை தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது.

குழந்தைகளுக்கும் பரவாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு உதவி செய்ய குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவதால் அவர்கள் மூலம் தொற்று பரவுகிறது.

உதவியாளரை தவிர்க்க முடியாத நிலை இருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பிற நோயாளிகளுக்கும் தொற்று பரவுகிறது.

அதனால் கருவுற்ற தாய்மார்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பரிசோதனை செய்து கொள்ள வெளியில் வர வேண்டாம். இந்த நேரத்தில் அவசியமான பரிசோதனைக்கு மட்டும் செல்வது நல்லது.

தாய்மார்கள் இ-சஞ்சீவி திட்டத்தின் மூலமும், உதவி மையம் மூலமும் மருத்துவர்களின் ஆலோசனைகளை போன் வழியாக பெற்றுக் கொள்ளலாம். நேரில் வரத்தேவையில்லை.

பிரசவ வலி வந்தால் மட்டும் மருத்துவமனைக்கு வந்தால் போதுமானது. தாய்ப்பால் கொடுப்பதாலோ, கர்ப்பத்தின் வழியாகவோ குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாது.

கொரோனா பாதித்த பெண்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க இங்கு ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் மருத்துவமனைகள் மூலம் இங்கு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News