வழிபாடு
சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தபோது எடுத்தபடம்.

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்- ஞானப்பிரசுனாம்பிகை திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-03-05 05:44 GMT   |   Update On 2022-03-05 05:44 GMT
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று அதிகாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வேத பண்டிதர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கங்காபவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிைக தாயாரை கோவில் அலங்கார மண்டபத்தில் வைத்து தங்க நகைகளாலும், பல வண்ணமலர்களாலும் அலங்காரம் செய்தனர். அதோடு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய பட்டு வஸ்திரத்தை அணிவித்தும் அலங்காரம் செய்தனர்.

அங்கு கணபதி பூஜை, புன்னியாவசனம், வருண பூஜை, கலச பூஜை, ஹோமம் நடந்தது. சண்டிகேஸ்வரர் கல்யாண தரகராக செயல்பட்டு 5 முறை பேச்சு வார்த்தை நடத்தி சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள பார்வதிதேவியை சம்மதிக்க வைத்த நிகழ்ச்சியை பக்தர்கள் நடத்தி காண்பித்தனர்.

இதையடுத்து மணமக்களின் திருமண உடைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து மேள தாளம், மங்கல வாத்தியங்கள் இசைக்க, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் இரவு 9 மணியளவில் சபாபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி தம்பதியர், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரகசீனிவாசுலு தம்பதியர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News