செய்திகள்
கோப்புபடம்.

பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு

Published On 2021-11-21 08:04 GMT   |   Update On 2021-11-21 08:04 GMT
மழைக்காலம் என்பதால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியாமல் உள்ளனர்.
திருப்பூர்:

செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் பிளஸ் -2 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள்  தொடங்கியுள்ளன. மாணவர்களின் நலன்கருதி நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் நிலையில் பாடங்களை முடிக்க ஆசிரியர்கள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. 

இதனால் மாணவர்களுக்கு பாடங்களை முடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஆசிரியர்கள் உள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரு ஆண்டுகளை போல் நடப்பாண்டும் ‘ஆல்பாஸ்’ அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் அலட்சியமாக உள்ளனர். 

கடந்த ஒரு மாதத்தில் மாணவர் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது. 60 சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிகின்றனர். விடுமுறை எடுக்கும் மாணவர்களை தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறோம். 

பலரும் காய்ச்சல், சளி எனக்கூறி விடுமுறை எடுக்கின்றனர். மழைக்காலம் என்பதாலும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் வருகை புரியாமல் உள்ளனர். 

மாணவர்கள், பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி, பள்ளிக்கு வரவழைக்கும் பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தீவிரமாக இறங்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News