ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பட்டு சாற்றும் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பட்டு சாற்றும் வைபவம்

Published On 2020-11-28 09:01 GMT   |   Update On 2020-11-28 09:01 GMT
கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் பட்டு சாற்றும் வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
கவுசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பட்டு சாற்றும் வைபவம் விடிய, விடிய நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கவுசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவைகள் சாற்றும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.

நேற்று முன்தினம் கவுசிக ஏகாதசி என்பதால் அன்று இரவு முதல் நேற்று காலை வரை ரெங்கமன்னார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பட்டு சாற்றும் வைபவம் நடைபெற்றது.

இதற்காக நேற்று முன்தினம் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் மேள, தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து பெரிய பெருமாள் சன்னதி பகல் பத்து மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் 108 பட்டு புடவைகள் சாற்றும் வைபவம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி நேற்று காலை வரை நடைபெற்றது. அப்போது கவுசிக புராணத்தை வேதபிரான் பட்டர் சுதர்சன் படித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து ஆண்டாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-

குளிர்காலம் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் கவுசிக ஏகாதசி தினத்தன்று ஆண்டுதோறும் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள், பட்டு சாற்றும் வைபவம் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள், ரெங்கமன்னார் உள்ளிட்ட சாமிகளுக்கு 108 பட்டு புடவைகள் சாற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News