இந்தியா
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

இந்தியாவில் கொரோனா நிலவரம்: 4-வது நாளாக குறைந்த தினசரி பாதிப்பு

Published On 2022-01-25 04:38 GMT   |   Update On 2022-01-25 04:38 GMT
நாடு முழுவதும் நேற்று 62,29,956 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 162 கோடியே 92 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடந்து 4-வது நாளாக நேற்றும் குறைந்துள்ளது.

இன்று காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,55,874 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 20-ந்தேதி பாதிப்பு 3.47 லட்சமாக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு சரிந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 18 லட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் பரிசோதனை 14.7 லட்சமாக குறைந்திருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு நேற்று பெருமளவில் குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 3.06 லட்சமாக இருந்த நிலையில் நேற்று 16 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல தினசரி பாதிப்பு விகிதம் 20.75-ல் இருந்து 15.52 சதவீதமாக குறைந்து உள்ளது.

அதேநேரம் வாராந்திர பாதிப்பு விகிதம் 17.03 சதவீதத்தில் இருந்து 17.17 சதவீதமாக உயர்ந்தது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 202 ஆக உயர்ந்தது.

நாட்டில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 46,426 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 30,215 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு 40,805ல் இருந்து நேற்று 28,286 ஆக குறைந்தது.

கேரளாவில் நேற்று 56,69,611மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,514 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு விகிதம் 47.72 சதவீதமாக குறைந்தது.

ஆந்திராவில் புதிதாக 14,502 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு 40,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி பாதிப்பு விகிதம் 36 சதவீதத்தை தாண்டி உள்ளது.

ஆந்திராவில் 2-ம் அலையின் போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு விகிதம் 25.81 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 3-வது அலையில் கடந்த மாத இறுதியில் தினசரி பாதிப்பு விகிதம் 0.3-ல் இருந்து 30 நாட்களில் 36 சதவீதத்தை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பால் மேலும் 614 பேர் இறந்து உள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 171 பேர் அடங்குவர்.

இதுதவிர தமிழ்நாட்டில் 46, பஞ்சாபில் 45, மகாராஷ்டிராவில் 36, மேற்குவங்கத்தில் 37, கர்நாடாகவில் 32, டெல்லியில் 30, குஜராத்தில் 25 பேர் நேற்று இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 4,90,462 ஆக உயர்ந்தது.

3-வது அலை கடந்த மாத இறுதியில் ஏற்றம்பெற்ற நிலையில் தினசரி பாதிப்பு நாள்தோறும் கடுமையாக உயர்ந்ததால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.



இந்நிலையில் 3-வது அலையில் முதல் முறையாக நேற்று புதிய பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 2,67,753 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சத்து 71 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 22,36,842 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 12,493 குறைவாகும்.

இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 16,49,108 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 71.88 கோடியாக உயர்ந்தது.


Tags:    

Similar News