பொது மருத்துவம்
ஒரு பக்க கால் வலி சியாட்டிகா

ஒரு பக்க கால் வலி சியாட்டிகா

Published On 2021-12-21 06:11 GMT   |   Update On 2021-12-21 06:11 GMT
சியாட்டிகா வலி மிகவும் கடுமையானதாக இருந்தாலும் கூட இதை சுலபமான சிகிச்சைகள் மூலமும் மருந்துகள் மூலமும் உடற்பயிற்சிகள் மூலமும் சரி செய்ய இயலும்.
ஒரு பக்க கால் வலி, இடுப்பு முதல் கணுக்கால் வரையில் முழுவதுமாக கடுமையான வலி. இதுவே சியாட்டிகா. இதில் இடது புறமோ வலது புறமோ அல்லது சில நேரங்களில் இரண்டு கால்களிலும் கூட வலி ஏற்படலாம். இந்த வலி சிலருக்கு மிதமாகவோ அல்லது மிகவும் கடுமையான தாங்கமுடியாத வலியாகவோ ஏற்படலாம். இந்த வலி இடுப்பிலிருந்து ஆரம்பித்து காலின் பின்புறம் வழியாக கணுக்கால் வரையில் முழுவதுமாக பரவி இழுப்பது போல் வலிக்கும். சிலருக்கு வலி இல்லாமல் மரத்துப்போதல், லேசான விருவிருப்பு தன்மையோடு கூட இந்த வலி இருக்கும்.

இந்த வலி எதனால் ஏற்படுகிறது என்றால் நம்முடைய தண்டுவடத்தில் இருந்து பிரியும் சியாட்டிகா நரம்பு, கிளையாக பிரிந்து நம் அடி முதுகிலிருந்து மேலும் கிளையாக பிரிந்து இடுப்பு, தொடை, கால் மற்றும் கணுக்கால் பகுதி வரை நீண்டு இருக்கும். இந்த நரம்பில் ஏற்படும் அழற்சி, சியாட்டிகா என்று அழைக்கப்படுகிறது. இந்த வலி சிலநேரங்களில் எரிச்சலுடன் திடீரென்று ஷாக் அடிக்கும் உணர்வாக கூட சிலருக்கு தோன்றும்.

தும்முவது, இருமுவது, நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது போன்றவை இந்த வலியை அதிகரிக்கக் கூடியவை. வயது, உடல் பருமன், சில விதமான வேலைகள் மற்றும் நீரிழிவு நோய், சியாட்டிகா பிரச்சனையை அதிகப்படுத்தக் கூடியவை. இந்த சியாட்டிகா வலி, தண்டுவடம் சில நேரங்களில் குறுகி விடுவதாலும், முதுகெலும்பின் மூட்டுக்களில் எலும்பு வளர்ச்சி ஏற்படுவதாலும், முதுகெலும்பின் இடையே உள்ள டிஸ்க் பகுதி, எலும்பு தேய்மானத்தினால் பிதுங்கி வெளியே வருவதினால், மூட்டுக்களில் அழற்சி ஏற்பட்டால், சில காயங்களினால் நரம்புகள் அழுத்தப்படுவதினாலும், சிலவகை கட்டிகளினாலும் மற்றும் கர்ப்ப காலங்களிலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

சியாட்டிகா வலி மிகவும் கடுமையானதாக இருந்தாலும் கூட இதை சுலபமான சிகிச்சைகள் மூலமும் மருந்துகள் மூலமும் உடற்பயிற்சிகள் மூலமும் சரி செய்ய இயலும்.

ஒத்தடங்கள்

குளிர்ச்சியான ஒத்தடங்கள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் விட்டு விட்டு 20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். குளிர்ந்த ஒத்தடம் கொடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுப்பதும் மிகவும் பயனளிக்கும். குளிர்ந்த ஒத்தடம் சூடு ஒத்தடம் மாற்றி மாற்றி கொடுப்பதும் கூட வலியை குறைக்க உதவும்.

வலி நிவாரணிகள்

மருத்துவர் பரிந்துரையின் பேரில் சில வலி நிவாரணி மாத்திரைகளையும், அழற்சியை போக்கும் மாத்திரைகளையும் அதிகமான வலி இருக்கும் பொழுது எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சிகள்

அடி முதுகை வளைத்து செய்யும் சில உடற்பயிற்சிகள் நரம்புகளின் அழுத்தத்தை குறைக்க உதவும். ஸ்கிப்பிங், இடுப்பை வளைத்து செய்யும் பயிற்சிகள் போன்றவை சியாட்டிகா வலியை குறைக்கும். யோகாசனங்களும் இந்த வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது.

அக்குபங்சர்

உடலின் குறிப்பிட்ட சில புள்ளிகளின் மேல் மெல்லிய ஊசிகளால் குத்தி வலி நிவாரணம் கொடுக்கும் அக்குபஞ்சர் முறை சியாட்டிகா வலியை குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மிகவும் உதவுகிறது.

மாற்று மருத்துவ முறைகள்

ஹோமியோபதி ஆயுர்வேதா சித்தா நேச்சுரோபதி யுனானி போன்ற மருத்துவ முறைகளிலும் சியாட்டிகா வலிக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய மருந்துகளை பெற்று பலன் அடையலாம்.
Tags:    

Similar News