செய்திகள்
சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் செல்லாண்டி பட்டிக்கு செல்லும் மண் சாலையை படத்தில் காணலாம்.

குளித்தலை-வெள்ளியணை பகுதிகளில் சேறும் சகதியுமாக மாறிய சாலைகள்- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-01-14 05:57 GMT   |   Update On 2021-01-14 05:57 GMT
குளித்தலை, வெள்ளியணை பகுதிகளில் சேறும் சகதியுமாக மாறிய சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை:

குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட 4- வது வார்டு பகுதியான சிவன், லெட்சுமி கோவில் தெரு, மேல மற்றும் கீழக்குடித்தெரு ஆகிய தெருக்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பழைய தார்ச்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு பின்னர் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டி நிரப்பப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் நிரப்பட்ட சாலையில் பொதுமக்கள் நடக்கவோ, மோட்டார் சைக்கிள்களில் செல்லவோ இயலாதநிலை உள்ளது. புதிய சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்த காரணத்தால், ஜல்லிக்கற்களில் சில மாதங்கள் கழித்து செம்மண் கொட்டப்பட்டுள்ளன. செம்மண் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தற்போதுவரை இங்கு தார்சாலை அமைக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து மாவட்ட திட்ட இயக்குனர், குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் தற்போது குளித்தலை பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், இந்த சாலை சேறும் சகதியுடன், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளதாக இப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இச்சாலையில் நடந்துசெல்லும்போது பலர் வழுக்கி கீழே விழுந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே மழை நின்றபின்னர் விரைவில் இங்கு தார்சாலை அமைக்கத்தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமென இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தான்தோன்றி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சி செல்லாண்டிபட்டி காலனியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த காலனி வெள்ளியணை கரூர் சாலையில் இருந்து பிரிந்து மேற்கே செல்லும் மண் சாலையில் அமைந்து உள்ளது. இந்த மண் சாலையின் வழியாக காலனி மக்கள், சமத்துவபுரம் மற்றும் தாளியாபட்டி செல்கின்ற மக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்கின்றவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த மண் சாலையை தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டுமென காலனி, சமத்துவபுரம் மற்றம் தாளியாபட்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News