செய்திகள்
கீழப்பழுவூர் கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

அரியலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின

Published On 2021-05-03 15:53 GMT   |   Update On 2021-05-03 15:53 GMT
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கால் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடின.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவிப்பின்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூரில் உள்ள அனைத்து வீதிகளும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது. போலீசார் நகரின் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கீழப்பழுவூர், திருமானூர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், உணவு விடுதிகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தன. துப்புரவு பணியாளர்கள் தங்களது பணிகளை வழக்கம்போல் செய்தனர். அரியலூரில் ஆட்டோக்கள் ஓடவில்லை. அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வழக்கம்போல் பல்லவன், வைகை, குருவாயூர், சேது, மலைக்கோட்டை விரைவு ரெயில்கள் வந்து சென்றன. அரியலூர் ரெயில் நிலையத்தில் மிகக்குறைந்த அளவிலேயே பயணிகள் வந்து சென்றனர். மதியம் 3 மணி அளவில் 10 நிமிடம் லேசான மழை பெய்தது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் நகரில் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. தள்ளுவண்டிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், பால் பொருட்கள் விற்பனை கடைகள், மாலைகள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு சாலை சந்திப்பு, துறைமங்கலம் மூன்று சாலை, பாலக்கரை, வெங்கடேசபுரம் பிரதான சாலை, மதனகோபாலபுரம் பிரதான சாலை, வாகன நெரிசல் மிக்க காமராஜர் வளைவு சிக்னல், துறையூர் சாலை, எளம்பலூர் சாலை, உழவர்சந்தை சாலை, தபால்நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

ஓரிரு ஓட்டல்களில் பார்சலில் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது. புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும், உணவு வாங்கி சாப்பிட ஆட்கள் வராததாலும் சமைக்கப்பட்ட உணவுகள் குறைந்த அளவே விற்பனை ஆகின. மருத்துவ சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், வழிப்போக்கர்கள் என சிலர் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு சென்றனர்.
Tags:    

Similar News