ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

சோதனைகளை சாதனைகளாக்குவோம்...

Published On 2020-11-10 06:55 GMT   |   Update On 2020-11-10 06:55 GMT
நமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரார்த்தனைகள் மூலம் அவற்றை வென்று சாதனைகளாக்க முடியும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமின்.
மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப்பாதை அல்ல. தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான் மனித வாழ்க்கை. அல்லாஹ் காட்டிய வழியில் ஒருவர் செயல்பட்டு, நேர்மையுடனும், நீதியுடனும் நடந்துகொண்டாலும், அவரை வேதனைகளும், சோதனைகளும் தீண்டத்தான் செய்கின்றன.

இறைவன் சிலருக்கு செல்வம் கொடுத்து சோதனை செய்கின்றான், சிலருக்கு வறுமையைக்கொடுத்து சோதிக்கின்றான். சிலருக்கு வாழ்க்கையில் எல்லா இன்பங் களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறது. சிலருக்கோ அடுத்தடுத்து துன்பங் கள் தொடருகிறது.

ஏன் இந்த சோதனைகள்?, எதற்காக இந்த வேதனைகள்?.

அல்லாஹ், தனது திருமறையில் கூறும்போது, ‘மனிதர்களை நான் செல்வத்தைக்கொண்டும், சந்ததிகளைக்கொண்டும் சோதனை செய்வேன்’ என்று குறிப்பிடுகின்றான். இந்த சோத னைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், இறையருளால் அதை எப்படி கடந்து செல்ல முயற்சி செய்கிறோம் என் பதை இறைவன் கண்காணிக்கின்றான்.

இதன் அடிப்படையிலேயே, அந்த சோதனைகளை கடந்து செல்லவும் நமக்கு வழிகாட்டுகிறான். அத்துடன் இறைவனின் விருப்பத்துக்கு ஏற்ப நாம் நடந்துகொண்டால் அதற்கு பரிசாக சொர்க்கத்தையும் தருகின்றான்.

இதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மூலம் அறிந்துகொள்ளலாம்:

“(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி, மேலும் பொருள்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங் கள்”. (திருக்குர்ஆன் 2:155).

வாழ்க்கையில் வெற்றி ஏற்படும் போது அது தனது உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கருதுவது மனித இயல்பு. தோல்விகள் வரும்போது மட்டும், “இறைவா, ஏன் என்னை கைவிட்டு விட்டாய்?” என்று இறைவனிடம் நியாயம் கேட்பவர்களும் உண்டு. ஆனால், சோதனை இல்லாமல் சொர்க்கம் இல்லை என்று இறைவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (திருக்குர்ஆன் 2:214)

எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அதை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவனிடமே அந்த சோதனையில் இருந்து பாதுகாப்பும், விடுதலையும் தேடவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டு என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் இதுதான் தெளிவான நஷ்டமாகும்” (திருக்குர்ஆன் 22:11).

நமக்கு வரும் சோதனைகளில் இருந்து விடுபடுவது எப்படி? என்ற சிந்தனை ஏற்படுவதுண்டு. இதற்கான வழிகாட்டிகள் திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் உள்ளன.

“(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ எனக் கூறுவார்கள்” என்று திருக்குர்ஆன் (2:156) தெரிவிக்கின்றது.

நபி (ஸல்) அவர்களும், ‘இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று பிரார்த்திப்பது வழக்கம். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி)

எனவே, நமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரார்த்தனைகள் மூலம் அவற்றை வென்று சாதனைகளாக்க முடியும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமின்.

பேராசிரியர். முகம்மது அப்துல் காதர், சென்னை.
Tags:    

Similar News