லைஃப்ஸ்டைல்
பெண் குழந்தைகளின் வளர்ச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி

பெண் குழந்தைகளின் வளர்ச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி

Published On 2019-10-30 02:37 GMT   |   Update On 2019-10-30 02:37 GMT
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதும், பிறந்த பெண் குழந்தைகள் சந்தேக மரணங்களை எதிர்கொள்வதும் மறுப்பதற்கில்லை.
காலங்காலமாக பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அதே போல தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதும், பிறந்த பெண் குழந்தைகள் சந்தேக மரணங்களை எதிர்கொள்வதும் மறுப்பதற்கில்லை.

மக்கள் தொகையில் 1000 பேருக்கு பெண்கள், ஆண்களுக்கு இணையாக அல்லது கூடுதலாக இருப்பதை வைத்து கொண்டு எல்லாம் சரியாகிவிட்டது என்று தீர்மானம் செய்வது தவறு. இந்த புள்ளிவிவரங்கள் பெண்கள் வாழ்நாள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள தாக்கம். அவ்வளவுதான். உண்மையான அளவுகோல் பிறப்பு விகிதம் மற்றும் 5 வயதில் பாலின விகிதம் மற்றும் பெண் கல்வி, ஊட்டச்சத்து, சட்ட பாதுகாப்பு, உயர்கல்வி, இணையான ஊதியம், பதவி உயர்வுகள், அதிகாரமளித்தல் போன்றவைகள் தான். சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவரங்கள், தமிழ்நாட்டில் பெண், ஆண் மக்கள் தொகை விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 2005, 2007-ம் ஆண்டில் 896 என்ற நிலையில் இருந்து இன்றைக்கு 954 என்று உயர்ந்துள்ளதை காட்டுகிறது.

பிறப்பில் பாலின விகிதாச்சாரம் என்ன என்பது தான் முதல் அளவுகோல். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி 2013-15 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆண், பெண் பாலின விகிதாச்சாரம் 1000-க்கு 911 மட்டுமே. இந்த விகிதாச்சாரம், 2014-16 இரண்டு ஆண்டுகளின் போது 1000-க்கு 915 ஆக உயர்ந்துள்ளது. மிகச்சிறிய, மகிழ்ச்சி தராத வளர்ச்சி. ஸ்கேன் சென்டர்களில் சட்டத்திற்கு புறம்பாக பாலினம் கண்டறியப்பட்டு பெண் குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்படுவதும், அப்படி பிறந்துவிட்ட குழந்தைகள் அந்த குடும்பத்தின் இரண்டாவது பெண் குழந்தையாக இருக்கின்ற பட்சத்தில் சில சமயங்களில் சந்தேக மரணம் அடைவதும் தெரியவருகின்றன. 1994-ம் ஆண்டின் சட்டத்தின்படி பிறக்கின்ற குழந்தை பாலினத்தை கண்டறிந்து வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சட்டத்தின்கீழ் 1835 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஸ்கேன் சென்டர்கள் தவறு செய்துள்ளனர் என்று 140 ஸ்கேன் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 119 வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசு கொடுத்துள்ள தகவல்.

தேசிய குற்றங்கள் தகவல் அறிக்கை 2017-ம் ஆண்டுக்குரிய புள்ளி விவரங்கள்படி கருவில் கொல்லுதல், பிறந்த குழந்தைகளை கொல்லுதல், குழந்தைகளை நிர்க்கதியாக விட்டு செல்லுதல் ஆகிய குற்றங்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 313 முதல் 318-ன் கீழ் தமிழ்நாட்டில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரியலூர், சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுவதை இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகளிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் இருந்தும் தெரியவருகின்றன.

இந்த 10 மாவட்டங்களில் பிறப்பு விகிதம் ஆண், பெண் 1000-க்கு 928 என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருவதை ஏதோ கற்பனை கதை என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. பெண்களுடைய பிறப்பு விகிதம் கூடுதலாகிவிட்டது அல்லது மொத்த மக்கள்தொகையில் பெண்கள் கூடுதலாக இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சி தரலாம். ஆனால் பெண்கள் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்று கருதிவிட முடியாது. பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் தான் என்ன? ஆண் குழந்தைகளுக்கு நிகராக ஊட்டச்சத்து கிடைக்கப்பெறாமை, பெண் கல்வி அவசியம் என்கிற சூழல் புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் முழுமை பெறாத நிலை, பெண்களின் உயர்கல்விக்கு குடும்பம், உறவுகள் வரவேற்பும், ஆதரவும் தரும் நிலை வளராதது.

பெண்களை பாரமாக கருதி திருமணம் நடத்திவிட்டால் கடமை தீர்ந்தது என்று நினைக்கின்ற அதர பழசான சமூக சிந்தனை பெண்களுக்கு உள்ளது. ஆண்களுக்கு நிகரான ஊதியமும், பதவி உயர்வும் வழங்க மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களே பெண்களுடைய வளர்ச்சிக்கு எதிரிகளாக மாறுகின்ற மனப்பாங்கு நிலவுகிறது. அரசும், மக்களும் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும். அடிப்படைக்கல்வி இலவசமாக வழங்கப்பட்டாலும் அனைத்து பெண்களும் இலவச கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரியும் போது அவர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்

பெண் குழந்தைகள் தொடர்பான சட்டங்களை செயல்படுத்த அதிகமான பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட ஒரு புதிய காவல் பிரிவினை ஏற்படுத்தி அதன் செயல்பாடுகளை காவல் துறை தலைவரே நேரில் கண்காணித்தல். பெண் குழந்தைகள் மீதான தேவையற்ற பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், ஏளனப் பார்வைகள், பொது இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான சேட்டைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாற வேண்டும்.

நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கொண்டு வந்து முடிவு செய்ய வேண்டும். தவறான அல்லது விருப்பமில்லாத முறையில், புலனாய்வு மேற்கொண்டு தண்டனை வழங்க இயலாத அளவிற்கு சாட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து அந்த பரிந்துரை மீது அரசு ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் நிலை தான் சமுதாய வளர்ச்சியின் அளவு கோல். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அரசும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமுதாய நலன் காக்கும் பொதுமக்களும் இணைந்து தங்களுடைய பங்கை வழங்கும் போது நிச்சயமாக நேர்மறை மாறுதல்கள் நடைமுறைக்கு வரும். பல விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திலும் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று எதிர்பார்ப்போம்.

எஸ்.எஸ்.ஜவகர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.
Tags:    

Similar News