செய்திகள்

அம்மா பதறிவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் உடைந்த போதிலும் பேட்டிங் செய்தேன்: ஆப்கன். பேட்ஸ்மேன்

Published On 2019-06-19 09:54 GMT   |   Update On 2019-06-19 09:54 GMT
அம்மாவின் மனது காயம்பட்டு விடக்கூடாது என்பதற்காக பந்து ஹெல்மெட்டை பலமாக தாக்கியபோதிலும் தொடர்ந்து பேட்டிங் செய்தேன் என ஆப்கானிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 397 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 247 ரன்கள் சேர்த்தது.

4-வது வீரராக களம் இறங்கிய ஹஸ்மதுல்லா ஷாகிதி 100 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார். 24 ரன்கள் எடுத்திருக்கும்போது 140 கி.மீட்டர் வேகத்தில் மார்க் வுட் வீசிய பந்து ஷாகிதியின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில் தடுமாறி விழுந்தார்.

உடனடியாக ஆப்கானிஸ்தான் அணியின் பிசியோ மற்றும் ஐசிசி டாக்டர் அவரை பரிசோதித்தனர். அப்போது ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் வெளியேறுங்கள் என்று வலியுறுத்தினர். ஆனால், ஷாகிதி வெளியேற விருப்பம் இல்லாமல் தொடர்ந்து பேட்டிங் செய்கிறேன் என்றார். இதனால் புது ஹெல்மெட் உடன் ஷாகிதி தொடர்ந்து பேட்டிங் செய்தார். அதன்பின் 52 ரன்கள் அடித்தார்.



போட்டிக்குப்பின் இதுகுறித்து ஷாகிதி கூறுகையில் ‘‘நான் உடனடியாக எழுந்து விளையாட விரும்பியது என அம்மாவிற்காகத்தான். கடந்த வருடம் நான் எனது தந்தையை இழந்தேன். அதனால் எனது அம்மாவின் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

என்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லோரும் பேட்டியை கண்டு ரசித்தனர். எனது மூத்த அண்ணன் மைதானத்திற்கு நேரடியாக வந்து போட்டியை ரசித்தார். எனக்காக அவர்களை கவலைப்பட வைக்க விரும்பவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News