ஆன்மிகம்

எமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்

Published On 2019-06-25 08:04 GMT   |   Update On 2019-06-25 08:04 GMT
விதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மகாபாரதத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் வாழ்ந்த அஸ்தினாபுரத்தின் அரசிகளாக இருந்தவர்கள் அம்பிகா, அம்பாலிகா. இவர்கள் இருவருக்கும் பணிப்பெண்ணாக இருந்தவளுக்கும், வியாசருக்கும் பிறந்தவர்தான் விதுரர். இவர் கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கும், பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கும் சகோதர முறை ஆவார். இவர் திருதராஷ்டிரரின் அரசவையில் அமைச்சராக இருந்தார். விதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது.

மாண்டவ்யர் என்ற முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்போது ஒரு திருடர் கூட்டம் அங்கு வந்து ஒளிந்து கொண்டது. அதை மாண்டவ்யர் அறியவில்லை. திருடர்களைத் தேடி வந்த மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கைது செய்ததோடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மாண்டவ்ய முனிவரை சித்ரவதை செய்தனர். மாண்டவ்ய முனிவர், எமதர்மனை அழைத்து, “எவருக்கும் தீங்கு நினைக்காத எனக்கு நேர்ந்த இந்த துன்பத்திற்கு காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு எமதர்மன், “நீ சிறு வயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய். அதன் பலன்தான் இது” என்றார். “அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது அநியாயம்” என்றார் மாண்டவ்யர். “அதுதான் கர்ம வினைப்பயன்” என்றார் எமதர்மன்.

உடனே மாண்டவ்யர் கோபம் கொண்டு, “நீ பூவுலகில் பிறப்பாய். அரச குலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாய் இருப்பாய்” என்று எமதர்மனுக்கு சாபம் கொடுத்தார். அதனால்தான் அவர் பணிப்பெண்ணுக்கு மகனாக பிறக்க நேர்ந்தது.
Tags:    

Similar News