செய்திகள்
மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தனியார் பள்ளி

திருச்சி தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

Published On 2019-10-12 13:59 GMT   |   Update On 2019-10-12 13:59 GMT
பெற்றோர்கள் முன்பு ஆசிரியை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:

திருச்சி மேலப்புதூரில் பெண்கள் கான்வென்ட் பள்ளி உள்ளது. தனியார் மூலம் நடத்தப்படும் இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியில் ஒவ்வொரு காலாண்டு மற்றும் அரையாண்டு காலங்களில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறும். அப்போது தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து படிப்பு தொடர்பாக ஆலோசனை செய்வார்கள். அறிவுரை கூறுவார்கள்.

இன்று காலை பள்ளியின் அலுவலகத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர், 11ம்வகுப்பு மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொன்மலை செங்கர் உடையார் தெருவை சேர்ந்த ராக்கி எமர்சன் என்பவரின் மகள் ஏஞ்சலின் லேமோ என்ற 11ம்வகுப்பு மாணவியின் பெற்றோரிடம் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் காலாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததை பற்றி கேள்வி எழுப்பினர். வீட்டில் ஏஞ்சலின் லேமோ வீட்டு பாடம் படிக்கிறாரா? என்று விசாரித்தனர்.

அப்போது பெற்றோர்கள் பதில் அளித்த பிறகு மாணவி ஏஞ்சலின் லேமோவை தலைமை ஆசிரியை திட்டினார். பெற்றோர் முன்னிலையில் தன்னை திட்டியதால் ஏஞ்சலின் லேமோ கண்ணீர் விட்டு அழுதார். அவரை மற்றவர்கள் தேற்றிய நிலையில் திடீரென ஆவேசத்துடன் அறையில் இருந்து ஓடிய அவர் திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

30 அடியில் இருந்து குதித்தால் மாணவியின் கால்கள், முதுகு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவியை உடனடியாக வாகனத்தில் ஏற்றி திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு மாணவி மாற்றப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியை திட்டியதால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமை ஆசிரியை,ஆசிரியைகள் பெற்றோர்களிடமும் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.இதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News