ஆன்மிகம்
11 மாதங்களுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு

11 மாதங்களுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு

Published On 2021-02-16 04:36 GMT   |   Update On 2021-02-16 04:36 GMT
11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பழனி முருகன் கோவில் தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த தைப்பூச திருவிழாவின் 5-வது நாளில் மட்டும் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் மீண்டும் தங்கரத புறப்பாட்டை தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக 15-ந்தேதி (நேற்று) முதல் தங்கரத புறப்பாட்டை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

அப்போது சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடைபெறும் பகுதிக்கு சென்றார். அங்கு சின்னக்குமாரருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் வெளிப்பிரகாரத்தில் இருந்து தங்கரத புறப்பாடு தொடங்கியது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என சரண கோஷங்களை எழுப்பினர். 11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர்ஈஸ்வர், செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News