செய்திகள்
கோப்புபடம்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 150 தியேட்டர்களை திறக்க நடவடிக்கை

Published On 2020-11-02 13:51 GMT   |   Update On 2020-11-02 13:51 GMT
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 150 தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தியேட்டர்களை தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம்:

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களும் கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து சினிமா தியேட்டர்கள் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையொட்டி வருகிற 10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் பொதுமக்கள் அமர வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களை வருகிற 10-ந் தேதி திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தியேட்டர்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. குறிப்பாக கழிவறை பகுதிகள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் தூய்மை செய்யும் பணியும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேலம் வினியோகஸ்தர் இளங்கோவன் கூறியதாவது:-

சேலம் பகுதியில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளது. இது தவிர சேலம் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்தநிலையில், வருகிற 10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தியேட்டர்கள் முழுவதும் தூய்மை செய்யும் பணி நேற்று காலை தொடங்கி விட்டது. ஒரு சில நாட்களில் இந்த பணி முழுவதும் முடிவடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News