செய்திகள்
டிஜிபி திரிபாதி

30ந்தேதியுடன் திரிபாதி ஓய்வு- தமிழகத்தில் புதிய டி.ஜி.பி. யார்?

Published On 2021-06-25 10:23 GMT   |   Update On 2021-06-25 10:23 GMT
டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சென்னை:

தமிழக போலீஸ் டி.ஜி.பி திரிபாதி வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து. புதிய டி.ஜி.பி யார்? என்கிற எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

இதையடுத்து டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதில் டி.ஜி.பி.க்களாக உள்ள சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய 3 பேரில் ஒருவர் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் 28-ந் தேதி ஆலோசனை நடத்தி புதிய டி.ஜி.பி. யார் என்பது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்துக்கொள்ள அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு 3 அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். இவர்களில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி.யாக நியமித்துக்கொள்ளலாம்.

சைலேந்திர பாபு, கரன் சின்ஹா இருவரும் 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள். தற்போதைய சூழலில் இவர்கள் இருவரும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சஞ்சய் அரோரா உள்ளார்.

இவர்கள் 3 பேருமே சென்னையில் பல்வேறு பிரிவுகளில் காவல்துறையில் பணியாற்றி உள்ளனர். சைலேந்திரபாபு தற்போது தீயணைப்புத்துறை டி.ஜி.பி.யாக இருந்து வருகிறார். சென்னையில் உயர் பதவிகளை வகித்த சஞ்சய் அரோரா தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி.யாக காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் சென்னையில் சட்டம்-ஒழுங்கு பிரிவுகளில் சிறப்பாக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்கள் ஆவர்.

எனவே இவர்களுக்கு டி.ஜி.பி. ஆவதற்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டி.ஜி.பி. அந்தஸ்தில் சுனில்குமார் சிங், கந்தசாமி, பிரதீப் வி பிலிப் ஆகியோரும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News