செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்

Published On 2020-11-22 08:41 GMT   |   Update On 2020-11-22 08:41 GMT
தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

நேற்று 2-வது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத அ.தி.மு.க. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது.

கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.க. கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் பா.ஜ.க. கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.

தொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இன்று 3-வது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News