செய்திகள்
பனிப்பொழிவு

அரியலூர் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

Published On 2019-11-01 14:21 GMT   |   Update On 2019-11-01 14:21 GMT
அரியலூர் மாவட்டத்தில் அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செந்துறை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

தொடர் மழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. பெரும்பாலான சாலைகள் தூர்ந்து போய் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கினர்.

குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்திருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் மழையின் தாக்கம் குறைந்து அதிகளவில் குளிர் நிலவி வருகிறது. இன்று காலை அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சாலையில் எதிரே நடந்து செல்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

பலத்த மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்றிருந்த விவசாயிகளுக்கு இன்று காணப்பட்ட பனிப்பொழிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Tags:    

Similar News