செய்திகள்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ

பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு: காரணம் இதுதான்

Published On 2021-10-12 02:58 GMT   |   Update On 2021-10-12 02:58 GMT
கால்பந்து போட்டியை பார்பதற்காக சென்ற பிரேசில் அதிபரை அதிகாரிகள் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேசிலியா :

கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார். இந்த நிலையில் பிரேசிலின் சா பாலோ நகரில் குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடி வரும் அதிபர் ஜெய்ர் போல்சனரோ உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்பதற்காக அங்குள்ள மைதானுக்கு சென்றார்.

ஆனால் மைதானத்தில் இருந்த அதிகாரிகள் ஜெய்ர் போல்சனரோ  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘‘எதற்கு தடுப்பூசி சான்றிதழ். நான் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினேன், அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அது ஏன்? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது’’ என கூறினார்.

Tags:    

Similar News