செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பெருந்துறையில் நாளை மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

Published On 2021-02-20 05:21 GMT   |   Update On 2021-02-20 05:21 GMT
பெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று அவர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

இதில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி வருகிறார்கள்.

அதன்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்துறை- விஜயமங்கலம் 4 வழி சாலை காடப்பமடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார். இதில் மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை பெற்று கொள்கிறார். இந்த மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படுகிறது.

இதை தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்கு பெருந்துறையில் ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.

ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்கள் சார்பில் தி.மு.க. வுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் கோரிக்கைகள் முன் வைத்தும் இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டுக்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காசியண்ண கவுண்டர் தலைமை தாங்குகிறார். இதில் தமிழக விவசாயிகள் சங்கங்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், உப்பாறு பாசன விவசாயிகள், கெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சங்கம், ஐ.டி.பி.எல். திட்ட பாதுகாப்பு விவசாயிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஈரோடு வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட அந்தியூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று பேசுகிறார்.

இதில் கோபி, அந்தியூர், பவானிசாகர், பவானி தொகுதி பொதுமக்கள் மற்றும் மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
Tags:    

Similar News