செய்திகள்
வெங்காயம்

மதுரை மார்க்கெட்டில் இருமடங்கு விலை உயர்ந்த பல்லாரி-சின்ன வெங்காயம்

Published On 2019-11-04 10:34 GMT   |   Update On 2019-11-04 10:34 GMT
மதுரை மார்க்கெட்டில் பல்லாரி-சின்ன வெங்காயம் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
மதுரை:

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் கனமழை காரணமாக ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பல்லாரி, சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி விளைச்சலில் கடுமையான பாதிப்பு ஏற் பட்டது.

இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து வருகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் பல்லாரி, சின்ன வெங்காயம் வரத்தும் குறைந்துள்ளன. இதனால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது:-

கனமழை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் மார்க்கெட்டுக்கு பல்லாரி, சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளன. எனவே கடந்த வாரம் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்ட பல்லாரி, சின்ன வெங்காயம் இப்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி வரத்தும் குறைந்துள்ளதால் அதன் விலையும் ஏறுமுகம் அடைந்துள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. கேரட் ரூ.30-க்கும், பட்டர் பீன்ஸ் ரூ.110-க்கும், சோயாபீன்ஸ் ரூ.90-க்கும் விற்கப்படுகிறது. முறுங்கை ரூ.55-க்கும், முட்டைகோஸ் ரூ.18-க்கும் விற்பனை ஆகிறது.

மாங்காய் ரூ.75-க்கும், புடலை ரூ.20-க்கும், சவ்சவ் ரூ.18-க்கும் விற்கப்படுகிறது. மிளகாய் ரூ.30-க்கும், பீட்ருட் ரூ.20-க்கும், முள்ளங்கி ரூ.16-க்கும் விற்பனை ஆகிறது.

கனமழை நீடிக்கும் பட்சத்தில் காய்கறி வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது காய்கறி விலை மேலும் அதிகரிக்கும். இன்னும் 2 வாரங்களில் ஐயப்பன் சீசன் தொடங்க உள்ளது. எனவே காய்கறி விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலை நீடித்தால் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் சில நாட்களில் ரூ.100-ஐ தாண்டிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறி விலை ஏற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மழையை காரணம் காட்டி பதுக்கலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுத்து காய்கறி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News