உள்ளூர் செய்திகள்
பல்லடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளிக்க சென்ற போது எடுத்தப்படம்.

சட்ட விரோத ஆலைகள் மீது நடவடிக்கை - விவசாயிகள் மனு

Published On 2022-01-12 08:01 GMT   |   Update On 2022-01-12 08:01 GMT
அனுமதியின்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடி சீல் வைக்கப்பட்ட தேங்காய் கரி தொட்டி ஆலைகள் மீண்டும் இயங்கி வருகின்றன.
பல்லடம்:

பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தேங்காய் கரி தொட்டி ஆலைகளை மூட வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், மானூர்பாளையம் கிராமம், உடுமலைப்பேட்டை வட்டம் பெரியபட்டி கிராமம் உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடி சீல் வைக்கப்பட்ட தேங்காய் கரி தொட்டி ஆலைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. 

இந்த ஆலைகளுக்கு சட்டப்படி எவ்வித அனுமதியும் இல்லை. இவைகள் கரித்துகள்களை காற்றில் பரப்பி விவசாய நிலங்கள் முழுவதும் பாழ்பட்டுக் கிடக்கிறது. தென்னை மரங்களில் கரித்துகள்கள் படர்ந்து பச்சையம் உற்பத்தி செய்வதும், மகரந்த சேர்க்கை நடைபெறுவதும் தடைபட்டு விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கரித்துகள்கள் காற்றில் பரவுவதால் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளின் மீது கரித்துகள்கள் பரவி நீர் நிலைகள் முழுவதும் மாசுபட்டுள்ளது. அருகில் உள்ள உப்பாறும் இதற்கு தப்பவில்லை .

தொட்டி கரி ஆலைகள் பயன்படுத்திய கழிவுநீரை சுத்தம் செய்யாமல் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் அப்படியே விடுவதால் நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது.

எனவே சட்ட விரோதமாக மாசு ஏற்படுத்தும் ஆலைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் மானூர்பாளையம் கிராமத்தில் காற்று மற்றும் நீர் மாசு ஏற்படுத்தி சட்டவிரோதமாக நடந்து வரும் தென்னைமட்டை மில் நிறுவனத்தை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். 

இதன் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொங்கல் முடிந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கால்நடைகளுடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன், மற்றும் நிர்வாகிகள் நல்லாக்கவுண்டர், சடையபாளையம் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News