செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி பட்னாவிசுக்கு சம்மன்

Published On 2019-11-29 06:55 GMT   |   Update On 2019-11-29 06:55 GMT
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அங்கு நடந்த அரசியல் குழப்பங்கள் ஏராளம். சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க தீவிரம் காட்டின. 

ஆனால் திடீர் திருப்பமாக பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழுவின் தலைவராக இருந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

பாஜக ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக மற்ற கட்சிகள் வழக்குகள் தொடர பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து பெரும்பான்மை இல்லாததால் பட்னாவிசும் அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவியேற்றார். 

இந்நிலையில், தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் தனக்கு எதிரான கிரிமினல் வழக்குகளின் தகவல்களை மறைத்தது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டுள்ளது.

1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் பட்னாவிசுக்கு எதிராக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அந்த இரண்டு விஷயங்களிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. பட்னாவிஸ் தனது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இந்த தகவலை குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News