செய்திகள்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு போலீசார்

நெல்லையில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது- 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் விடிய, விடிய பொதுமக்கள் தவிப்பு

Published On 2021-01-13 09:41 GMT   |   Update On 2021-01-13 09:41 GMT
மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று காலை அதனையொட்டி அமைந்துள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாபநாசம் படித்துறை மூழ்கியது. சேரன்மகாதேவி பழைய ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. கல்லிடைக்குறிச்சியில் உள்ள பழைய பாலத்தை தொட்டப்படி நீர் சென்றது.

மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று காலை அதனையொட்டி அமைந்துள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

காரையாறு இரும்பு பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்வதற்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மாஞ்சோலை செல்லும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

முக்கூடல் போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் முத்துமாலையம்மன் கோவிலுக்கு செல்லவும், ஆற்றில் குளிக்க செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வி.கே.புரத்தில் பெய்த கனமழை காரணமாக லூர்துசாமி என்பவருடைய வீடு இடிந்தது. அவரது வீட்டின் அருகே சங்கர் என்பவர் வீடும் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. முக்கூடல் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் நத்தம் காலனியில் ஒருவரது வீடு இடிந்தது.

முக்கூடல் பகுதியில் உள்ள கோரன்குளம், ஆப்ரியன்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பின. வெள்ளத்தால் திருப்புடைமருதூர்- வீரவநல்லூர் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து தடைபட்டது. அந்த பகுதியில் ஆயிரம் ஏக்கரில் நடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.

அப்பகுதியில் உள்ள அண்ணாநகர், சிவகாமிபுரம் போன்ற தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளி, பேரூராட்சி திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் நடுக்கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது. மேலப்பாளையம்- டவுனை இணைக்கும் மேலநத்தம் ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் அங்கு போலீசார் போரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர பகுதியிலும் தாமிரபரணி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவில் உள்ள சுமார் 100 வீடுகளில் நேற்றிரவு வெள்ளம் புகுந்தது. விடிய, விடிய அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இன்று அதிகாலையில் பாளை தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 30 வீடுகளில் தவித்தவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர். அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 50 பேரும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வசித்த சுமார் 30 குடும்பங்களை ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

பாளை அண்ணா நகர் பகுதியிலும் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
Tags:    

Similar News