செய்திகள்
விஜயபாஸ்கார் பேட்டி

எனது வீட்டில் ஏதும் கைப்பற்றப்படவில்லை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார்

Published On 2021-10-18 16:05 GMT   |   Update On 2021-10-18 16:05 GMT
லஞ்ச ஒழிப்புத் துறையினர் தனது வீட்டில் நடத்திய சோதனையில் எந்தவொரு ஆவணங்களோ, பணமோ, தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, சென்னை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இன்னும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விஜய பாஸ்கர் வீட்டில் ஆவணங்கள், பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘‘எனக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், வழக்கறிஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கைச் சட்டப்படி சந்திப்பேன். தனது இல்லத்தில் எந்த ஆவணங்களோ, பணமோ தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை.

நான் கடினமான ஒரு உழைப்பாளி. பொது வாழ்கையில் கூட இரவு, பகல் பார்க்காமல் நான் கடினமான உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன். இது அனைவருக்கும் தெரியும். சட்டத்தை ஏற்று மதிக்கும் குடிமகன் என்பதால் இன்றைய தினம் நடத்தப்பட்ட சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன். எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எதையும் கைப்பற்றவில்லை. பொது வாழ்க்கையில் பயணிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவது வழக்கம்தான்’’ என்றார்.
Tags:    

Similar News