செய்திகள்
கண்மாயில் சிக்கிய மீன்களுடன் இளைஞர்

மீன்பிடி திருவிழா- கொரோனாவை மறந்து நள்ளிரவில் திரண்ட கிராம மக்கள்

Published On 2021-05-01 10:33 GMT   |   Update On 2021-05-01 10:33 GMT
கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ள நிலையில் மீன்பிடிப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலூர்:

கிராமங்கள் நிறைந்த மதுரை மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள கண்மாய்களில் ஊர் சார்பாக மீன்கள் வளர்க்கப்படும்.

மீன்கள் வளர்ந்த நிலையில் அதனை பொதுமக்கள் பிடித்து செல்வதற்கு தேதி குறிக்கப்பட்டு மீன்பிடி திருவிழாவாக நடத்தப்படும்.

இதில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்வார்கள்.

அதன்படி மதுரை மேலூரை அடுத்துள்ள திருவாதவூரில் இன்று மீன்பிடி திருவிழா நடந்தது.

மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு பெரிய கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. எனவே இந்த கண்மாயின் பெயர் சோழப் பேரேரி என்று அழைக்கப்படுவது உண்டு.

இந்த கண்மாய்க்கு தண்ணீர் பெரியாறு கால்வாயில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கண்மாய் மூலமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்கு பாசனத்தினால் பயனடைகிறது.

ஒவ்வொரு வருடமும் விவசாய பணிகள் முடிவடைந்து பின்னர் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் மீன்களை பிடிக்க மேலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து மீன்களைப் பிடிக்க வந்திருந்தனர்.

ஆனால் கொரொனா காலம் என்பதால் போலீசாரால் தடை ஏற்பட்டு விடுமோ என்று பயந்து அவர்கள் நள்ளிரவிலேயே 12 மணி அளவில் கண்மாய்க்குள் இறங்கி ஏராளமான மீன்களை பிடித்து அள்ளிச் சென்றனர்.

இதனால் காலையில் மீன்பிடித்திருவிழா நடைபெறும் என்று நினைத்து சென்ற ஏராளமான மக்கள் ஏமாற்றமடைந்தனர்

நள்ளிரவில் சென்ற மக்கள் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, குறவை என பல்வேறு வகை வகை மீன்களை பிடித்து வீடுகளுக்குச் சென்றனர்

கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ள நிலையில் மீன்பிடிப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News