செய்திகள்
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் ஓட்டுபோட்ட மூதாட்டியின் கை விரலில் அடையாள மை வைக்கப்பட்டது

2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- மதுரை மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Published On 2021-10-09 09:37 GMT   |   Update On 2021-10-09 09:37 GMT
திருமங்கலம் மாவட்ட ஊராட்சி வார்டில் இன்று நடந்த வாக்குப்பதிவில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.
திருமங்கலம்:

மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 104 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

தமிழகத்தில் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு (திருமங்கலம்) மற்றும் கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 17 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஊராட்சி திருமங்கலம் 16-வது வார்டு, கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டுகள் உள்ளடங்கிய 8 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலுக்காக 97 வாக்குச்சாவடிகளும், இதர பதவிகளுக்காக 7 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

கலெக்டர் அனிஷ் சேகர் மற்றும் அதிகாரிகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்ட 23 பகுதிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தலில் 54 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.

திருமங்கலம் மாவட்ட ஊராட்சி வார்டில் இன்று நடந்த வாக்குப்பதிவில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.

காலை 11 மணி நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மாலை 5 மணிக்கு மேல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் இருக்கும் பட்சத்தில் அவர் களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவை முழுமையாக செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னர் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. வருகிற 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Tags:    

Similar News