செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் சோதனைச்சாவடி கட்டிடம் திறப்பு

Published On 2021-07-19 09:47 GMT   |   Update On 2021-07-19 09:47 GMT
கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையான தேவனூர்புதூரில் புறக்காவல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உடுமலை:

உடுமலை ஆனைமலை பிரதான சாலையில் அமைந்துள்ளது தேவனூர்புதூர். இந்த ஊராட்சி முன்பு கோவை மாவட்டத்தின் உட்பகுதியாகவும் தற்போதைய திருப்பூர் மாவட்டத்தின் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்தப் பகுதி 2 மாவட்டங்களின் எல்லையாக இருப்பதால் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் எளிதில் தப்பித்து அண்டை மாவட்டத்திற்கு சென்று விடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் பின்னடைவை சந்தித்து வந்தனர். அதைத்தொடர்ந்து கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையான தேவனூர்புதூரில் புறக்காவல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தேவனூர்புதூர் பகுதியில் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இதன் காரணமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் சோதனைச்சாவடிக்கு நிரந்தர கட்டடம் கட்டித் தரப்படாததால் போலீசார் இயற்கை சீற்றங்களால் அவதிக்கு உள்ளாகி வரந்தனர். அதைத்தொடர்ந்து சோதனைச்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு மாற்றப்பட்டது. 

அங்கிருந்தவாறு போலீசார் இரவு பகலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்தனர். அதைத் தொடர்ந்து சோதனைசாவடிக்கு கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் முடிவுற்ற நிலையில்  போலீஸ் சோதனைச்சாவடி கட்டிடத்தை உடுமலை துணைபோலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

அப்போது தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். இதனால் சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டு வருகின்ற போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News