ஆட்டோமொபைல்
ஓலா எஸ்1

இரண்டு வேரியண்ட்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

Published On 2021-08-16 05:27 GMT   |   Update On 2021-08-16 11:24 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 

ஓலா எஸ்1 மற்றும் எஸ் 1 ப்ரோ அம்சங்கள்

ஓலா எஸ்1 மாடலில் 2.98kWh பேட்டரி, ஹைப்பர்டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11 பி.ஹெச்.பி. திறன், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 



ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 121 கிலோமீட்டர் வரை செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும். ஹைப்பர்சார்ஜரில் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

எஸ்1 ப்ரோ மாடலில் 3.97kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லலாம். இதனை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். 

ஓலா எஸ்1 சீரிஸ் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் அக்டோபர் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News