லைஃப்ஸ்டைல்
வெயில் காலத்தில் பழங்கள் காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும்

வெயில் காலத்தில் பழங்கள் காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும்

Published On 2021-05-17 06:28 GMT   |   Update On 2021-05-17 06:28 GMT
வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், செரிமான கோளாறு, தலைவலி மற்றும் சரும பிரச்சனைகளை உணவில் மூலமாகவே சீர் செய்ய இயலும் என்று உணவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அக்னி வெயில் தொடங்கி வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெயிலில் தலைகாட்ட முடியாமல் பலரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். சிலருக்கு உடல் உஷ்ணம், செரிமான கோளாறு, தலைவலி மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களை உணவில் மூலமாகவே சீர் செய்ய இயலும் என்று உணவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோடைக்கேற்ற பழங்களில் முக்கியமானவை தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம் ஆகியவை. அவற்றை பழமாகவோ அல்லது சாலட் மற்றும் பழச்சாறு வடிவிலோ சாப்பிடலாம். பூசணி வகை பழங்களில் 95 சதவீத நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் , புரோட்டின், வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் செரிமான கோளாறு, சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

உடல் புத்துணர்ச்சியாக இருக்க தினமும் ஒரு நெல்லிக்கனியை  சாப்பிடலாம். இதயம், கூந்தல் , சருமம் ஆகியவற்றை இளமையாக பராமரிக்க உதவும் வைட்டமின் சி சத்து இதில் பெருமளவு உள்ளது. உடலுக்கு தேவையான உடனடி சக்தியை நெல்லிக்கனி தரும்.

கோடை காலத்தில் மாம்பழ சீசன் ஆரம்பமாகும் என்றாலும் அவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது. மாம்பழச்சாறு உடலுக்கு உடனடி சக்தி தரும் என்றாலும் அதிக அளவில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் திடீர் உடல் உபாதை ஏற்படக்கூடும். அதனால் மாமப்பழச்சாறுடன் சீரகம், உப்பு சேர்த்து பருகலாம்.

சுத்தம் செய்த புதினா இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கலாம். அதனால் உடல் உஷ்ணம் அகலும். வாந்தி, மயக்கம் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

சோற்று காற்றாழையின் சதைப்பகுதியின் வழவழப்பான தன்மை அகலும் வரை தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னர் அதனுடன் சிறிதளவு நீர் மோர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து ஜூஸாக பருகலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து வயிறு சுத்தமாகி பசியை தூண்டுவதுடன் உடலில் புத்துணர்ச்சியும் ஏற்படும்.

நீர்ச்சத்து நிறைந்த பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும்.

நீர்ச்சத்து நிறைந்த தக்காளியை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் அடங்கியுள்ள லைக்கோபீன் என்ற ரசாயனப்பொருள் வெயிலால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.

சாம்பார் வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். அதில் உள்ள குவர்சடின் என்ற ரசாயனப்பொருள் வெப்பத்தால்  ஏற்படக்கூடிய அரிப்பை தடுக்கும்.

தண்ணீர், பால் அல்லது தயிரில் அவலை ஊறவைத்து கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை மற்றும் பழங்கள் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.
Tags:    

Similar News