செய்திகள்
மம்தா பானர்ஜி

மத்திய அரசு பணிக்கு தலைமை செயலாளரை அனுப்பாமல் தனது ஆலோசகராக நியமித்த மம்தா பானர்ஜி

Published On 2021-05-31 18:47 GMT   |   Update On 2021-05-31 18:47 GMT
தலைமை செயலாளரை திரும்ப அழைக்கும் மத்திய அரசின் உத்தரவை நிராகரித்து, அவரை தனது தலைமை ஆலோசகராக மம்தா பானர்ஜி நியமித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள அரசின் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவின் பணிக்காலம் மே 31-ந் தேதியுடன் (நேற்று) முடிவடைய இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு பணிக்காக, மாநில அரசின் வேண்டுகோளின்பேரில், அவருக்கு மத்திய அரசு 3 மாத பணி நீட்டிப்பு அளித்திருந்தது.

அதே சமயத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பு ஆய்வுக்கு சென்ற பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். இதையடுத்து, அதே நாளில் தலைமை செயலாளரை மத்திய பணிக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.



இது, பழிவாங்கும் செயல் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், திடீர் திருப்பமாக, தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை ஓய்வுபெற வைத்து, தன்னுடைய தலைமை ஆலோசகராக மம்தா பானர்ஜி நேற்று நியமித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நார்த் பிளாக்கில் மத்திய பணியில் சேருமாறு அலபன் பந்தோபாத்யாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், இன்று முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை ஆலோசகர் பொறுப்பில் அலபன் பந்தோபாத்யாவை மம்தா நியமித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அலபன் பந்தோபாத்யாவை நாங்கள் பணியில் இருந்து விடுவிக்கவில்லை. அவரை தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற அனுமதித்துள்ளோம். ஜூன் 1-ந் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகராக அவரை நியமித்துள்ளோம்.

மாநில அரசின் அனுமதியின்றி அவரை மத்திய பணியில் சேருமாறு மத்திய அரசு நிர்பந்திக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று காலையில், பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாநில அரசுடன் ஆலோசிக்காமல், மேற்கு வங்காள தலைமை செயலாளரை மத்திய பணிக்கு திரும்ப அழைத்திருப்பது தன்னிச்சையானது.

இந்த உத்தரவை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இது, மாநில மக்களின் நலன்களுக்கு எதிரானது. முற்றிலும் நியாயமற்றது.

ஆகவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் என்று மாநில மக்கள் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா காலகட்டத்தில், தலைமை செயலாளரை நாங்கள் மத்திய பணிக்கு அனுப்பமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News