செய்திகள்
வாடிவாசலில் இருந்து புறப்பட்ட காளையை அடக்க தயாராகும் மாடுபிடி வீரர்கள்.

தருமபுரியில் முதன்முதலாக 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

Published On 2021-02-13 07:10 GMT   |   Update On 2021-02-13 07:10 GMT
தருமபுரியில் முதன்முதலாக நடைபெற்ற ஜல்லிகட்டில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
தருமபுரி:

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் சேலம் மாவட்டத்திலும், திருச்சியிலும் ஏறு தழுவதல் என்கிற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடைபெறும்.

வரலாற்றில் முதன் முறையாக தருமபுரி மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தருமபுரியில் உள்ள சோகத்தூர் டி.என்.சி. மைதானத்தில் இன்று காலை நடந்தது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, சப்-கலெக்டர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் டி.என்.சி. மைதானம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

போட்டி தொடங்கும் முன்பாக மாடுபிடி வீரர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் பதிவு செய்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்கும் காளைகளை பதிவு செய்தனர். காளைகள், மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. இதில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

ஜல்லிகட்டில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது இதுவே முதல்முறை என்பதால் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக தருமபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

108 ஆம்புலன்ஸ் 6 வாகனங்கள், 30 மருத்துவ குழுக்கள், ஆயிரக்கணக்கான போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் கேலரி மற்றும் 8 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியை காண கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதனால் அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு பொதுமக்கள் அதிகமானோர் வருகை புரிந்ததால் தருமபுரி, பென்னாகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

போட்டியில் பங்கேற்பவர்கள், பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் என அனைவரும் முககவசம் அணிந்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாங்கள் இது போன்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தான் பார்த்துள்ளோம், நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

இங்கு பொதுமக்கள் அதிகமானோர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்திருந்தனர்.

மேலும் காளைகள் பொதுமக்களை தாக்க முடியாதவாறு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த பெண்களுக்கென தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தது. உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போன்று வருடந்தோறும் நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
Tags:    

Similar News