செய்திகள்
கோப்புபடம்

நீர்நிலைகள் தூர்வாரப்படுமா? திருப்பூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2021-06-07 06:52 GMT   |   Update On 2021-06-07 06:52 GMT
கொரோனா தடுப்புபணி ஒருபுறம் இருந்தாலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாருவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தொழிற்சாலைகளின் இயக்கம், கடந்த காலங்களை போல் முழுவீச்சில் இருக்கவில்லை. வேலையில்லாத உள்ளூர் மக்கள் குறிப்பாக கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு விவசாயம்தான் கைகொடுத்தது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ‘குடிமராமத்துப்பணிகள்’ என்ற பெயரில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடந்தது. திருப்பூர் மாவட்டத்திலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டதன் மூலம் குளம், குட்டைகள் பலவற்றில், கோடைகாலம் கடந்தும், இன்றளவும்  தண்ணீர் தேங்கியிருப்பதை காண முடிகிறது.

வரும் ஆண்டிலும் கிராமங்களில் விவசாயம் தழைக்க வேண்டும். குடிநீர், பாசன நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் எனில் டெல்டா மாவட்டங்களை போன்றே நீர் நிலைகள்  தூர்வாரப்பட வேண்டும் என்பதோடு பணிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் 650க்கும் மேற்பட்ட இடங்களில், காவிரி ஆறு மற்றும் கால்வாய்களை தூர்வார, தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது. தூர்வாரும் பணிகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார்.வரும் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் அதுவரை தங்கி, தூர்வாரும் பணிகளை இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில், நீர்நிலைகளை நன்றாக தூர்வாரி ஆழப்படுத்தினால் அனைத்து இடங்களில் கொள்ளளவு அதிகரிக்கும். தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும். நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண் போன்றவை பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றவர்களுக்கும் பயன்படும். 

அரசு துறைகளுக்கு தேவையான பணிகள் மேற்கொள்ளவும் இவை பயன்படும். மேலும் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க முடியும்.கொரோனா தடுப்பு ஒரு பக்கம் வேகமாக நடந்தாலும் இன்னொரு புறம் விவசாயத்திற்கு துணைபுரியும்  தூர்வாரும் பணியை அரசு வேகப்படுத்த வேண்டும் என கிராமப்புற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News