செய்திகள்
ஒலிபெருக்கி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் கொரோனா எச்சரிக்கை

Published On 2020-03-26 10:22 GMT   |   Update On 2020-03-26 10:22 GMT
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார் பகல் முழுவதும் கொரோனா வைரஸ் எச்சரிக்கை அறிவிப்புகளை ஒலிபரப்பி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

கொரோனா வைரஸ் எச்சரிக்கை முன் நடவடிக்கையாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் சிவாச்சாரியார்கள் மட்டும் தினமும் வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

தற்போது கிரிவலப்பாதையில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார் பகல் முழுவதும் கொரோனா வைரஸ் எச்சரிக்கை அறிவிப்புகளை ஒலிபரப்பி வருகின்றனர்.

அதில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியில் வரக்கூடாது. தேவையின்றி வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

மேலும் கிரிவலப் பாதையில் தங்கியுள்ள 300-க்கும் மேற்பட்ட சாமியார்களும் போலீசாரின் எச்சரிக்கையால் தனிமையில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையிலும் தினமும் கிரிவலம் செல்லும் பழக்கம் உடைய உள்ளூர் பக்தர்கள் சிலர் மாலை வேளையில் கிரிவலம் சென்று வருகின்றனர்.

கொரோனா எச்சரிக்கையை மீறி திருவண்ணாமலை கல்லக்கடலை தெரு, குமரக்கோவில் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று காலையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் கூட்டமாக சென்று பொருட்கள் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News