செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரிக்கு 1½ டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது

Published On 2019-10-25 08:30 GMT   |   Update On 2019-10-25 08:30 GMT
கடந்த மாதம் முதல் இன்று காலை வரை 28 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.580 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது. பூண்டி ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வரத்தால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 11-ந் தேதி புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரிக்கு சராசரியாக 600 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து தற்போது அதிகமாகி உள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 723 கனஅடியாக உள்ளது.

கடந்த மாதம் 28-ந் தேதியிலிருந்து இன்று காலை வரை 28 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.580 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28. 45 அடியாக பதிவானது. 1406 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது.

பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் 415 கனஅடியும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் 23 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து தற்போது 2 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News