உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெள்ளத்தால் தவிக்கும் மலைவாழ் மக்கள் - கூட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா?

Published On 2022-04-16 07:09 GMT   |   Update On 2022-04-16 07:09 GMT
அமராவதி வனப்பகுதியில் உள்ள கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உடுமலை:

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு அதிகளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 

மலைவாழ் மக்கள் ரேஷன் பொருள்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வது உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கு சமவெளி கிராமங்கள் மற்றும் நகர் பகுதிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

ஒரு சில மலைவாழ் குடியிருப்பு பகுதியை தவிர மற்ற பகுதியில் பாதை அமைக்கப்படவில்லை. இதனால் வன விலங்குகளால் ஆபத்து நிகழக்கூடிய ஒற்றையடிப் பாதையில் அடர்ந்த வனப்பகுதியை மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  

அமராவதி வனச்சரகத்தில் உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் கிராமங்களுக்கு சென்று வருவதற்கு உடுமலை மூணாறு சாலையில் இருந்து உடுமலை வழியாக கூட்டாறு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம் கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் மாற்று வழிவழிப் பாதையாக கேரள மாநிலத்திற்கு உட்பட்ட சம்ப காட்டுப் பகுதியில் உள்ள ஒற்றையடித் தடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  

அந்த பாதையையும் கேரள வனத்துறையினர் முன்னறிவிப்பின்றி அவ்வப்போது திடீரென அடைத்து கொள்வதாகக் கூறப்படுகிறது. மழைக்காலங்களில் கூட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது சமவெளிப் பகுதிக்கு சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்றுவரை அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளவில்லை. 

இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் நகர் பகுதிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக வனப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

எனவே மலைவாழ் மக்கள் அச்சத்துடன் ஆற்றை கடந்து சென்று வர வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News