செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-11-20 09:49 GMT   |   Update On 2020-11-20 09:49 GMT
கும்மிடிப்பூண்டி அருகே மகளின் பிறந்தநாள் விழாவுக்கு ‘பேனர்’ வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே பாலவாக்கம் காலனியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கண்மணி (24).

நேற்று பாண்டியனின் ஒரு வயதான மகளுக்கு முதல் பிறந்தநாள் ஆகும். இதற்காக நேற்று முன்தினம் இரவு பாண்டியன், தனது வீட்டின் அருகே ‘பேனர்’ வைப்பதற்காக அந்த பகுதியில் தேங்கி கிடந்த முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவாறு தனது நண்பர் பசுபதி என்பவருடன் சேர்ந்து தைல மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் தைலமரம் முறிந்து விழுந்தது. தேங்கி நின்ற தண்ணீரில் நின்றபடி தைல மரக்கிளையை பிடித்தபடி நின்றிருந்த பாண்டியன் மற்றும் அவரது நண்பர் பசுபதி இருவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய பாண்டியனை சிகிச்சைக்காக பெரியபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த அவரது நண்பர் பசுபதி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News