செய்திகள்
மேகதாது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்- மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

Published On 2021-06-25 08:23 GMT   |   Update On 2021-06-25 08:23 GMT
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் கூறினர்.
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை ஆணைத்தின் 12வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார். 

தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அரசு சிறப்பு செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.



டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி அழுத்தம் கொடுத்தனர்.

இதேபோல் மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று திட்டவட்டமாக கூறினர்.


கர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சனையை எழுப்பிய நிலையில், தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News