செய்திகள்
அரை சதமடித்த ஜோ ரூட்

பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் 3-வது டெஸ்ட் - 3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 156/3

Published On 2019-08-25 02:23 GMT   |   Update On 2019-08-25 02:23 GMT
ஆஷஸ் டெஸ்டின் 3-வது போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை துரத்தும் முனைப்பில் இங்கிலாந்து போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லீட்ஸ்:

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 179 ரன்களும், இங்கிலாந்து 67 ரன்களும் எடுத்தன. உலக சாம்பியனான இங்கிலாந்து உள்ளூரில் மூன்று இலக்கத்தை கூட தொட முடியாமல் முடங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸ் போலவே இந்த இன்னிங்சிலும் அரைசதத்தோடு அதிகபட்ச ரன்களை பதிவு செய்த மார்னஸ் லபுஸ்சேன் 80 ரன்களில் (187 பந்து, 8 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். முன்னதாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, லபுஸ்சேனின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த லபுஸ்சேன் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, 359 ரன்களை இலக்காக கொண்டு, இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் (7 ரன்), ஜாசன் ராய் (8 ரன்) நிலைக்கவில்லை. அடுத்து இறங்கிய கேப்டன் ஜோ ரூட்டும், ஜோ டென்லியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 141 ரன்களாக உயர்ந்த போது, ஜோ டென்லி (50 ரன்) பெவிலியன் திரும்பினார்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 72 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 74 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இன்னும் 2 நாள் எஞ்சியிருப்பதாலும், மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தாலும் நிச்சயம் முடிவு கிடைக்கும் என்பதால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பை எட்டியுள்ளது.
Tags:    

Similar News