ஆன்மிகம்
கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2020-09-21 06:19 GMT   |   Update On 2020-09-21 06:19 GMT
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
முசிறி அருகே குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரதமுறைப்படி இங்கு வந்து தங்கி இருந்து பெருமாளை வணங்கினால் வினைகள் யாவையும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் திருப்பதிக்குச் சென்று தங்களது வேண்டுதல்களை செலுத்த முடியாதவர்கள், அவற்றை இங்கு வந்து நிறைவேற்றி சுகம் பெறுகின்றனர். அதனால், தென் திருப்பதி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 11.10 மணிக்கு கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

இன்று சிம்ம வாகனத்திலும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முறையே ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். 25-ந்தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு புஷ்பக விமானம் சேவையும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 9 மணிக்கு கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.

26-ந்தேதி காலை 7.30 மணிக்கு வெண்ணைத்தாழி நிகழ்ச்சியில் கிருஷ்ணன் அலங்காரம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந்தேதி நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேர்த்தட்டில் எழுந்தருளுகிறார்.

மாலை 3 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், 4 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 28-ந்தேதி மாலை4 மணிக்கு புண்ணியாகவாசனம் இரவு தீபாராதனையும் நடைபெறுகிறது. 29-ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்பப்பல்லக்கில் சேவை சாதிக்கிறார். தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.

அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் டோக்கன் அளித்து பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை www.gunaseelamtemple.com என்ற கோவில் இணையதளத்தில் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே காணும் வகையில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
Tags:    

Similar News