செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1088 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள்- அமைச்சர் தகவல்

Published On 2020-12-23 08:48 GMT   |   Update On 2020-12-23 08:48 GMT
கடந்த 10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1088 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை:

புதிய வகை கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சருடன் நேற்று உயர்மட்ட அளவில் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினோம். அவர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். இன்று இங்கிலாந்தில் இருந்து வந்த 10 பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அவரை உடனே தனிமைப்படுத்தினோம். அவருக்கு பரிசோதனை செய்து மாதிரியை புனேக்கு அனுப்பி உள்ளோம். அங்கிருந்து அறிக்கை வந்த பிறகுதான் அது புதிய வகை கொரோனாவா என்பது தெரியும்.

மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களுக்குள் யாரெல்லாம் தமிழகம் வந்து இருக்கிறார்களோ அவர்களை ஆட்டோ இ-பாஸ் மூலம் கண்காணித்து 1088 பேர் வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம்.

லண்டனில் இருந்து டெல்லி வழியாகவோ, மும்பை வழியாகவோ தமிழகத்துக்கு வந்தவர்களையும் கண்காணிக்கிறோம். 10 நாட்களில் வந்த 1088 பேரையும் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கண்டுபிடித்து கண்காணித்து வருகிறோம்.

பெங்களூர், கேரளா என வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களையும் மாநில எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிக்கிறோம். எனவே பொதுமக்கள் யாரும் பதட்டம் அடையவோ, பயப்படவோ வேண்டாம். இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் தடை விதித்துள்ளது.

யாருக்காவது புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சையை தொடங்கிவிடுவோம். இதை அரசு முழுமையாக கண்காணித்து வருகிறது. லண்டனில் இருந்து வந்து கொரோனா பாதித்தவர் பற்றிய தகவலை வெளியிட முடியாது. அது பதட்டத்தை ஏற்படுத்திவிடும். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

தளர்வுகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்துதான் முதல்-அமைச்சர் அறிவிக்கிறார். இப்போது புத்தாண்டு கொண்டாட தடை விதித்து இருப்பதும் நல்ல வி‌ஷயம் தான். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிக கூட்டம் கூடும் என்பதால் கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடும். எனவே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத, மக்களின் இயல்பு பணிகள் பாதிக்காத பல தளர்வுகளை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக நாம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.

புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற தளர்வுகள் தான் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவி மீண்டும் ஊரடங்குக்கு வழிவகுத்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை முழுமையாக கண்காணித்தாலே புதிய வகை கொரோனா பரவலை தடுத்துவிடலாம்.

தமிழகத்தில் மருத்துவ மனைகள் முழு கட்டமைப்புடன் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எனவே பொது மக்களுக்கு பதட்டம், பயம் எதுவும் வேண்டாம் என்று முதல்-அமைச்சர் சார்பில் நான் தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி 1.7 சதவீதம் என்ற அளவுக்கு கொண்டுவந்துவிட்டோம். உலக சுகாதார அமைப்பும், மத்திய அரசும் 5 சதவீதத்துக்கும் குறைவாக கொரோனா தொற்று இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் 2 சதவீதத்துக்கும் குறைவாக 1.7 சதவீதம் என்ற அளவுக்கு கொண்டுவந்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை.

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா பூஜ்ஜியம் என்ற அளவிலேயே உள்ளது. எனவே பொதுமக்கள் யாரையும் சிரமப்படுத்தாமல் அவர்களின் அன்றாட வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை தொடர அனுமதிக்கிறோம்.

அரசியல் கூட்டங்கள் இந்த நேரத்தில அவசியமான ஒன்றுதான். கூட்டம் நடைபெறும் இடத்தில் 50 சதவீதம் பேரே பங்கேற்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்களுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News